Published : 28 Nov 2020 04:23 PM
Last Updated : 28 Nov 2020 04:23 PM
ஹர்திக் பாண்டியாவும் உடற்தகுதியில்லாமல் இருக்கிறார், மற்றொரு ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் திறமையின் மீதும் எனக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் விராட் கோலியின் படை சமநிலை இல்லாமல் தடுமாறுகிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திேரலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் சேர்த்தது. 375 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே சேர்த்து 66 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வரிசையில் சேர்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை. ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் வரிசையில் மட்டுமே களமிறங்கினார். இதனால் 6-வது பந்துவீச்சாளர், பகுதிநேர பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறியது.
இந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கிரிக்இன்போ தளத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி சமநிலையில்லாமல் தடுமாறுகிறது. இந்த தடுமாற்றம் இப்போது ஏற்பட்டதல்ல, கடந்த உலகக்கோப்பைப் போட்டியிலிருந்து இந்த தடுமாற்றம் தொடர்கிறது. ஹர்திக் பாண்டியா பந்துவீசும் அளவுக்கு உடற்தகுதியில்லாமல் இருந்தால், 6-வது பந்துவீச்சாளரை எங்கிருந்து கொண்டு வருவீர்கள்.
விஜய் சங்கர் மட்டுமே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வரிசையில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனால், 5-வது அல்லது 6-வது வரிசையில் களமிறங்கி பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை விஜய் சங்கரால் ஏற்படுத்திவிட முடியுமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. விஜய் சங்கரால் கட்டுக்கோப்பாக 7 முதல் 8 ஓவர்கள் வீச முடியுமா. இதுதான் எனது சந்தேகம்.
இதுபோன்ற பிரச்சினைகளைத்தான் நாம் களையாமல் இருக்கிறோம். ரோஹித் சர்மா திரும்பி வந்தாலும், இந்தப் பிரச்சினையை நாம் சரி செய்ய முடியாது. மணிஷ் பாண்டேவே களமிறக்கினாலும், ரோஹித் சர்மா உடல்நலம் பெற்று களமிறங்கும் போது, விளையாடும் 11 வீரர்களில் மணிஷ் பாண்டேவுக்கான இடத்தில் பிரச்சினை இருக்கிறது. பேட்டிங் வரிசையில் இருக்கும் முதல் 6 பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 2 ஓவர்களை வீச முடியாத நிலையில்தான் இருக்கிறார்கள்.
ஆனால், ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஷ், மேக்ஸ்வெல் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். காயம் ஏற்பட்டாலும் ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்ப அடுத்தடுத்து ஆல்ரவுண்டர் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்.
குறிப்பாக மோசஸ் ஹென்ரிக்ஸ், சீன் அபாட் போன்ற வீரர்களுக்கு குறைந்தபட்சம் 2 ஓவர்களையாவது வீசச் செய்யலாம். அவர்களும் நன்றாகப் பந்துவீசுவார்கள். டேனியல் சாம்ஸ் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்.
ஆனால், ஹர்திக் பாண்டியா உடற்தகுதியில்லாவிட்டால், அந்த இடத்தை நிரப்பப்போவது யார், எந்த வீரர் இருக்கிறார்?
இவ்வாறு கம்பீர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT