Last Updated : 28 Nov, 2020 11:14 AM

 

Published : 28 Nov 2020 11:14 AM
Last Updated : 28 Nov 2020 11:14 AM

பாகிஸ்தான் அணியில் 7-வது வீரருக்கு கரோனா தொற்று உறுதி: விதிமுறைகளை மீறியதால் பயிற்சிக்கான அனுமதியை ரத்து செய்த நியூஸி. அரசு

கோப்புப்படம்

வெலிங்டன்



நியூஸிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 7-வது வீரர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே கரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அணி வீரர்களுடன் அந்த வீரரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தான் அணியில் 53 வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். நியூஸிலாந்து அரசு கரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாகக் கடைபிடித்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். நியூஸிலாந்துக்கு ஒரு பயணி வந்தபின் தனிமைப்படுத்தும் காலம் தொடங்கிய 3-வது நாளிலும், 12-வது நாளிலும் ஸ்வாப் பரிசோதனை நடத்தப்படும். அதில் நெகட்டிவ் இருக்கும் பட்சத்தில் அந்த பயணி நியூஸிலாந்து நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்.

அந்த வகையில் பாகிஸ்தான் வீரர்கள் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 3-வது நாளில் வீரர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஏற்கெனவே வெளியான முடிவுகளில் 6 வீரர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அந்த வீரர்கள் தனியாக ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் இன்று 7-வது வீரருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வீரர் ஏற்கெனவே சிகி்ச்சையில் இருக்கும் வீரர்களுடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கரோனா உறுதி செய்யப்பட்ட வீரர்களுக்கு 14 நாட்கள் தனிமைக் காலத்தையும் கடந்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் முழுமையாக கரோனா தொற்றிலிருந்து விடுபட்டபின்புதான் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையே ஹோட்டலில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் வீரர்கள் குழுவாக பயிற்சியில் ஈடுபடுவதற்கு நியூஸிலாந்து சுகாதாரத்துறை அனுமதியளி்த்திருந்தது. ஆனால், ஹோட்டலில் கரோனா தடுப்பு விதிகளைகளை மீறிய பாகிஸ்தான் அணியினர் ஹோட்டலில் சுதந்திரமாக நடமாடுவதும், உணவுகளை பரிமாறிக்கொள்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

இதையடுத்து, பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிக்கான அனுமதியையும் நியூஸிலாந்து அரசு ரத்து செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் விதிமுறைகளை மீறி நடந்தால், நியூஸிலாந்திலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

இதுகுறி்த்து நியூஸிலாந்து சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் ஆஸ்லே ப்ளூம்பீல்ட் கூறுகையில் “ பாகிஸ்தான் வீரர்கள் எங்கள் விதிமுறைகளை மதிக்கவில்லை, தொடர்ந்து மீறுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தொடர்ந்து விதிமுறைகளை மீறினால், அவர்கள் நியூஸிலாந்திலிருந்து திருப்பி அனுப்பிவைக்கப்படுவார்கள்.

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் முதல் 3 நாட்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது. ஆனால், வீரர்கள் வெளியேவருவதும், உணவுகளை பரிமாறிக்கொள்வதும், பேசுவதும், முகக்கவசம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது சிசிடிவி கேமிராவில் பதிவானது” எனத் தெரிவித்தார்.

நியூஸிலாந்து பாகிஸ்தான் இடையிலான டி20 தொடர் வரும் டிசம்பர் 18-ம் தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x