Published : 27 Nov 2020 06:16 PM
Last Updated : 27 Nov 2020 06:16 PM

எந்தக் கட்டத்திலும் இலக்கை எட்ட முடியாது என்று நினைக்கவில்லை: தோல்விக்குப் பின் விராட் கோலி பகிர்வு

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் யாரும் எந்தக் கட்டத்திலும் 375 ரன்கள் என்கிற இமாலய இலக்கை எட்ட முடியாது என்று நினைக்கவே இல்லை என அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

ஆட்டம் முடிந்ததும் விராட் கோலி பேசியதாவது:

"பயிற்சிக்கு எங்களுக்குப் போதிய நேரம் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக, சரியாக விளையாடாதபோது காரணங்கள் சொல்லக் கூடாது. அதிகமாக டி20 விளையாடி வந்தோம். நீண்ட நாட்களுக்குப் பின் முழு ஒரு நாள் போட்டியில் ஆடியிருக்கிறோம். அப்படியிருந்தாலும் கூட நாங்கள் இதற்கு முன்னும் ஒரு நாள் போட்டிகளில் ஆடி அனுபவம் பெற்றவர்கள்தான். 25-26 ஓவர்களுக்குப் பின் அணி வீரர்களின் உடல் மொழி ஏமாற்றமளித்தது.

பகுதி நேரம், பந்துவீச்சாளர்களை எப்படி சில ஓவர்கள் வீச வைக்க முடியும் என்று பார்க்க வேண்டும். ஹர்திக் பாண்டியா இன்னும் அதற்குத் தயாராகவில்லை என்பதால் அந்தச் சூழலைப் புரிந்து அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும். பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பவர்கள்தான் ஒவ்வொரு அணிக்குமே முக்கியம். அவர்கள் அணியில் ஸ்டாய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அதைச் செய்து வருகின்றனர். தொடர் விக்கெட்டுகளை எடுத்து அழுத்தம் தருகின்றனர். அது எங்களால் முடியாமல் போனது.

பேட்டிங்கைப் பொறுத்தவரை அனைவருமே தீவிரத்துடன் ஆடினோம். அதனால்தான் அனைவராலும் பவுண்டரி, சிக்ஸர் என அடிக்க முடிந்தது. எந்தக் கட்டத்திலும் எங்களால் இலக்கை எட்ட முடியாது என்று நினைக்கவே இல்லை. ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் அந்தத் தீவிரத்துக்கு ஒரு உதாரணம். ஆனால் முதல் 3 பேட்ஸ்மேன்கள் 130-140 ரன்களைச் சேர்க்க வேண்டும். அது இன்றைக்கு நடக்கவில்லை. நல்ல முறையில் நேர்மறைச் சிந்தனையோடு ஆடத்தான் அனைவருமே வந்திருக்கிறோம். எனவே அதே சிந்தனையோடு முன்னே செல்வோம்" என்று கோலி கூறியுள்ளார்.

நீங்கள் பந்து வீசுவீர்களா என்று கேட்ட போது, ஆரோன் ஃபின்ச் ஆடும்போது வீசுவேன் என்றும், ஏனென்றால் அவருக்குத் தனது பந்துவீச்சில் ஆட்டமிழக்க விருப்பமிருக்காது என்றும் விராட் கோலி விளையாட்டாகப் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x