Published : 27 Nov 2020 11:57 AM
Last Updated : 27 Nov 2020 11:57 AM
ரோஹித் சர்மாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் அவரால் இந்திய அணியுடன் துபாயிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா பயணப்பட முடியவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
முன்னதாக, ஐபிஎல் தொடரில் ஆடியபோது ஏற்பட்ட தசை நார் காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவால் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டது. பின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா விஷயத்தில் சரியான தெளிவில்லை, அவர் ஏன் அணியுடன் ஆஸ்திரேலியா பயணப்படவில்லை என்பதே சரியாகத் தெரியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
மேலும், அணியுடனே பயணப்பட்டிருந்தால் ஆஸ்திரேலியாவிலேயே காயத்துக்கான சிகிச்சையை மேற்கொண்டு டெஸ்ட் தொடருக்கு அவர் தயாராகியிருக்கலாம் என்றும் விராட் கோலி கூறியிருந்தார்.
தற்போது ரோஹித் சர்மா ஏன் பயணப்படவில்லை என்பதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. மேலும், டிசம்பர் 11ஆம் தேதி ரோஹித் சர்மாவின் உடற் தகுதி மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளது.
"தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரைப் பார்க்க ரோஹித் சர்மா மீண்டும் மும்பை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது சர்மாவின் தந்தை தேறி வருகிறார். இதனால் சர்மாவால் தேசிய கிரிக்கெட் அகாடமிக்குப் பயணப்பட்டு, தன் காயத்துக்கான சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்தது. சர்மாவுக்கு டிசம்பர் 11ஆம் தேதி உடற் தகுதி ஆய்வு செய்யப்பட்டும். இதன் பிறகு அவரது பங்கேற்பு குறித்த தெளிவு கிடைக்கும். ஆனால் விராட் கோலி சொன்னது போல இந்த விஷயத்தில் நிலவிய குழப்பத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம்" என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா உடற் தகுதி பெற்றாலும், கரோனா விதிமுறைகளால் 14 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும். எனவே, அவரால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது. ஆனால், இந்தத் தனிமைக் காலத்தில் ரோஹித் சர்மா பயிற்சி பெற விதிகளைச் சற்று தளர்த்த வேண்டும் என்று, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாலியீடம் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் காயம் காரணமாக இஷாந்த் சர்மா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட மாட்டார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு விட்டாலும் அவரால் உரிய நேரத்தில் உடற் தகுதி பெற முடியாது என்கிற காரணத்தால் டெஸ்ட் தொடரில் எந்த ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT