Published : 21 Nov 2020 10:42 AM
Last Updated : 21 Nov 2020 10:42 AM
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கரோனா வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெற இருந்த பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்யும் இங்கிலாந்து அணி வரும் 27-ம் தேதி முதல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக வீரர்களிடையே பயோ-பபுள் உருவாக்கப்பட்டுள்ளது. 21-ம் தேதி முதல்(இன்று) பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது.
இந்த சூழலில் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கடந்த செவ்வாய்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த ஒரு வீரரும், அந்த வீரரோடு தொடர்புடைய மற்ற இரு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 24 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியில் மேலும் ஒரு வீரர் கரோனாவில் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுவரை 2 வீரர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த வீரர்கள் குறித்த விவரங்களை தென் ஆப்பிரிக்க வாரியம் வெளியிடவில்லை.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் “ வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் மேலும் ஒரு வீரருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வீரர் தனிமைப்படுத்தப்பட்டு, போதுமான வசதிகளுடன் அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் வெளிப்படையாக இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை(21ம்தேதி) நடைபெற இருந்த பயிற்சி ஆட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இங்கிலாந்து அணியினர் கேப்டவுன் நகரம் வந்தபின் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT