Published : 20 Nov 2020 07:22 PM
Last Updated : 20 Nov 2020 07:22 PM
விராட் கோலி இல்லாத சமயத்தில் இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா சிறப்பாக வழி நடத்தினால், இந்திய அணியில் இரட்டைத் தலைமை பற்றிப் பேச ஆரம்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.
நீண்ட நாட்களாகவே இந்திய அணிக்கு டெஸ்ட், டி20, ஒருநாள் என ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் என்கிற பெருமைக்கு வழிநடத்திச் சென்ற அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக்க வேண்டும் என்ற கருத்துகள் எழுந்துள்ளன.
தற்போது நடைபெறவுள்ள ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில், முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு விராட் கோலி நாடு திரும்புகிறார். எனவே அவருக்குப் பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாகச் செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக விராட் கோலி இல்லாத நேரத்தில் இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்ற போது ரோஹித் சர்மாவே கேப்டனாகச் செயல்பட்டது நினைவுகூரத்தக்கது. ரஹானே துணை கேப்டனாக இருந்தாலும் ரோஹித் சர்மாவே கோலி ஆடாத டெஸ்ட் போட்டிகளில் தலைமை ஏற்பார் என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.
"இதுபற்றிய எனது கருத்து மிகவும் எளிமையானது. விராட், அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார். ஆனால் அது அவர் உடல் சோர்வடைவதைப் பொறுத்தது. ஏனென்றால் 2010ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறார். 70 சதங்கள், மலையளவு ரன்கள் எனச் சேர்த்துள்ளார்.
அவர் சோர்வாக உணரும் பட்சத்தில் டி20 தலைமையை ரோஹித்துக்குத் தருவதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அவர் முகத்தில் சோர்வைக் கண்டேன். அது அங்கிருந்த கரோனா தடுப்பு விதிமுறைகளால் இருக்கலாம். அவர் சற்று சலிப்பாக இருந்ததைப் போலத் தெரிந்தது. ரோஹித் கடந்த சில வருடங்களாகவே தலைமை ஏற்கத் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.
இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ரோஹித்தும் ஒருவர். அவரது திறமையின் மதிப்பு இப்போதுதான் அவருக்குப் புரிந்திருக்கிறது. கோலி இல்லாத சமயத்தில் தன்னை நிரூபிக்க இந்த ஆஸ்திரேலியத் தொடர்தான் அவருக்குச் சிறந்த வாய்ப்பு. அதை இரண்டு கைகளாலும் பற்றிக் கொள்ள வேண்டும். அணியை வழி நடத்தும் திறன் அவரிடம் உள்ளது. இது இந்தியாவுக்குக் கடினமான தொடராக இருக்கும். ரோஹித் போன்ற வீரர்களைத்தான் இந்தச் சூழலில் நான் நாடுவேன்.
அவரும் நன்றாக ஆடி அணியையும் நன்றாக வழி நடத்தினால் கண்டிப்பாக இரட்டைத் தலைமை குறித்த உரையாடல் நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT