Published : 20 Nov 2020 05:27 PM
Last Updated : 20 Nov 2020 05:27 PM
தான் ஐபில் தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று நினைத்தது சரியான முடிவே என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
நடந்த முடிந்த ஐபிஎல் தொடர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை ஆடிய சீஸன்களிலேயே மிக மோசமானதாக அமைந்தது. தொடர் தோல்விகளால் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி, தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது.
ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன்பேப் குடும்ப பிரச்சினை காரணமாக சுரேஷ் ரெய்னாவும், கரோனா நெருக்கடி சமயத்தில் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஹர்பஜன் சிங்கும் தொடரிலிருந்து விலகினர். இதனால் இரண்டு முக்கிய வீரர்கள் களம் கண்ட சிஎஸ்கே அணி பின்னடைவைச் சந்தித்தது.
சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹர்பஜன் சிங்கிடம் ஐபிஎல் பற்றிக் கேட்கப்பட்டது.
"கோவிட் நெருக்கடி சமயத்தில் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்று நான் எடுத்தது சரியான முடிவு என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு நான்தான்" என்று ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 2018-19 தொடரைப் போல இம்முறையும் தொடரை வெல்லும் என ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2018-19ஆம் ஆண்டில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முதல் முறையாக அந்த நாட்டில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. இம்முறையும் அதேபோல வென்றும் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளும் என்று கூறியிருக்கும் ஹர்பஜன் சிங், இம்முறை இரு அணிகளுக்குமான போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
"கடந்த முறை புஜாரா அற்புதமாக ஆடினார். இம்முறை புஜாரா, கோலியைத் தாண்டி மற்றவர்களும் சிறப்பாக ஆடி இவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். நமது வேகப்பந்து வீச்சு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. நீண்டகாலமாக நம்மிடம் அதிக வேகத்தில் பந்துவீசும் நான்கு பந்துவீச்சாளர்கள் இல்லை. இதுவும் கடந்த முறை நமது வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம்.
ஆஸ்திரேலிய அணியால் நம்மை ஆட்டமிழக்க வைக்க முடியுமென்றால் நம்மாலும் முடியும். அதுதான் நம்பிக்கை. இந்தத் தொடர் கடுமையான போட்டி நிறைந்ததாக இருக்கும். இந்தியா வெல்லும் என நம்புகிறேன்" என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் குறித்துப் பேசுகையில், "இம்முறை ஐபிஎல் தொடரில் வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷன் மற்றும் அப்துல் சமாத் ஆகியோரின் ஆட்டம் என்னை ஈர்த்தது. சமாத் எதிர்காலத்தில் எதிரணிகளுக்கு ஆபத்தான வீரராக இருப்பார். அவருக்குத் திறமை இருக்கிறது. அவரைச் சரியாக வழி நடத்தினால் மிகச் சிறந்த வீரராக வருவார்.
வருண் சக்ரவர்த்தியின் பொறுமை பிடித்தது. விக்கெட் எடுத்தபோதும் அதிக உற்சாகத்தைக் காட்டமாட்டார். பேட்ஸ்மேன்களால் கண்டுபிடிக்க முடியாதபடி பந்து வீசும் திறன் அவரிடம் உள்ளது. அதனால்தான் அவரை மர்ம ஸ்பின்னர் என்கிறார்கள்" என்று ஹர்பஜன் பாராட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT