Published : 20 Nov 2020 01:34 PM
Last Updated : 20 Nov 2020 01:34 PM
தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை ரோஹித் சர்மா நேற்று தொடங்கினார்.
ஆஸ்திரேலியத் தொடருக்காக துபாயிலிருந்து சிட்னி செல்லும் இந்திய அணியுடன் ரோஹித் சர்மா செல்லமாட்டார். மாறாக பெங்களூரு வந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று காயத்திலிருந்து பூரணமாக குணமடைய உள்ளார்.
தொடக்கத்தில் காயம் காரணமாக ஆஸ்திரேலியத் தொடருக்கான எந்த ஒரு அணியிலும் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. நவம்பர் 27 முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 3 டி20 , 3 ஒருநாள், 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.
அக்டோபர் 18ஆம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஐபில் தொடரில் ஆடும்போது, இடது தொடையில் ரோஹித் காயமடைந்த நிலையில், 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.
ஆனால், திடீரென ஐபிஎல் இறுதிப் போட்டியில் ரோஹித் சிறப்பாக விளையாடி காயத்திலிருந்து தான் மீண்டு விட்டதாக அறிவித்தார். இதனையடுத்து ஐபிஎல் இறுதிப் போட்டியன்றே பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சி மையத்தில் ரோஹித் சர்மா நேற்று தனது உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியைத் தொடங்கினார்.
மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இணைவதற்கு முன்னர் ரோஹித் சர்மா 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT