Last Updated : 19 Nov, 2020 01:24 PM

 

Published : 19 Nov 2020 01:24 PM
Last Updated : 19 Nov 2020 01:24 PM

டெஸ்ட் தொடரில் ஆஸி. அணியை மீண்டும் வீழ்த்த இந்திய அணிக்குச் சிறந்த வாய்ப்பு: பாக். முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறும் காரணங்கள் என்ன?

2018-ம் ஆண்டில் ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்ற இந்திய அணி: கோப்புப் படம்.

கராச்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்வதற்கு மற்றொரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்குத் தெரிந்தவரை ஆஸ்திரேலிய வாரியம் இந்த முறை வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களை அமைக்காது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 2 மாதங்கள் பயணம் செய்து இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இந்திய அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதில்லை என்ற நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

ஆனால், இந்த முறை பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலிய அணியினர் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். 5 புதிய வீரர்களும் சேர்க்கப்பட்டு தொடரில் அறிமுகமாகின்றனர்.

இந்திய அணியும் டெஸ்ட் தொடரில் ஆஸி. அணிக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் தீவிரமாகத் தயாராகி வருகிறது.

இதில் கேப்டன் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். மற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சற்று பின்னடைவைத் தந்தாலும், அதற்குப் பதிலாக ரோஹித் சர்மா வருவது ஆறுதல் அளிக்கும்.

முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்த முறையும் இந்தியா வெல்வதற்குச் சிறந்த வாய்ப்புகள் உள்ளன என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

கிரிக்பாஸ் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

''எனக்குத் தெரிந்து இந்த முறை ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு முழுமையாகச் சாதகமாக இருக்குமாறு தயார் செய்யமாட்டார்கள். அதாவது குறைவாக பவுன்ஸ் ஆகும் வகையில், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்குமாறுதான் அனைத்து ஆடுகளங்களும் இருக்கும்.

ஏனென்றால், பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும், டெஸ்ட் போட்டி நடக்கும் 5 நாட்களும் பார்வையாளர்கள் வரவேண்டும், போட்டியைக் காண வேண்டும் என்பதால், வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் இருக்காது. இருக்கக்கூடாது. அவ்வாறு போட்டி மூன்று நாளில் முடிந்துவிட்டால் ஆஸி. வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

கரோனா வைரஸாஸ் ஆஸ்திரேலிய வாரியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெரும் நிதியிழப்பைச் சந்தித்துள்ளது. இந்தியத் தொடரைத்தான் வெகுவாக நம்பியிருக்கிறார்கள். இந்தத் தொடரில் பார்வையாளர்கள் வருகையும், தொலைக்காட்சி விளம்பர வருமானமும் ஆஸி.வாரியத்துக்கு மிக முக்கியம் என்பதால், டெஸ்ட் போட்டியை 5 நாட்கள் தொடர்ந்து நடத்த விரும்புவார்கள்.

ஏற்கெனவே இந்திய அணியில் முதல் டெஸ்ட் போட்டியோடு கோலி விளையாடமாட்டார் எனும் தகவல் ஆஸி. வாரியத்துக்கும் பெரும் பின்னடைவாக இருக்கிறது. இதில் டெஸ்ட் போட்டி குறைந்த நாட்களில் முடிந்தால் பெரும் இழப்பைச் சந்திப்பார்கள்.

ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் 5 நாட்கள் எவ்வாறு நடத்துவது என்பதற்கான திட்டமிடலில்தான் இருக்கிறார்கள். அதற்கான ஆடுகளத்தைத்தான் தயாரிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஆஸி. அணியின் பேட்டிங் வரிசைக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்திய அணியிலும் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

இந்திய அணியின் பந்துவீச்சும் நன்றாக மெருகேறி இருக்கிறது. நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதை ஆஸி. அணியும் புரிந்து வைத்திருக்கும்.

ஆதலால், இந்த முறையும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நழுவவிடக்கூடாது.

ஒருநாள், டி20 தொடரில் மிகச்சிறந்த வீரராக இருக்கும் ரோஹித் சர்மா இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடாமல் இருப்பது இழப்புதான். மிகச்சிறந்த மேட்ச் வின்னராக ரோஹித் சர்மா களத்தில் நின்றுவிட்டால், எதிரணிக்கு சேதாரத்தை ஏற்படுத்திவிடுவார்''.

இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x