Published : 19 Nov 2020 09:34 AM
Last Updated : 19 Nov 2020 09:34 AM
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வீரருடன் நெருங்கிய தொடரில் இருந்த இரு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடருக்கு முன்பாக பயோ-பபுள் சூழலை உருவாக்கும் வகையில் வீரர்களிடையே பரிசோதனை நடத்தப்பட்டபோது கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட அந்த வீரர் யார், தனிமைப்படுத்தப்பட்ட இரு வீரர்கள் யார் எனும் விவரத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட மறுத்துவிட்டது.
தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்யும் இங்கிலாந்து அணி வரும் 21-ம் தேதி முதல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக வீரர்களிடையே பயோ-பபுள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வீரர் ஒருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
“தென் ஆப்பிரிக்க அணியில் ஒரு வீரருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வீரருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இரு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த 3 வீரர்களும் கேப்டவுன் நகரில் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்த 3 வீரர்களுக்குமே அறிகுறி இல்லாத கரோனா இருக்கிறது. இவர்கள் மூவரும் குணமடையும் வரை தென் ஆப்பிரிக்க அணியின் மருத்துவக் குழு கண்காணிக்கும்.
கேப்டவுனில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர் நடக்கும் முன் வீரர்கள், அணியின் மற்ற பணியாளர்களுக்கு இதுவரை 50க்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அதன்பின் பயோ-பபுள் சூழலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்து வேண்டும், அணியினரைப் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
3 வீரர்களுக்கு மாற்றாக எந்த வீரரும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் ஆலோசிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT