Published : 03 Oct 2015 06:50 PM
Last Updated : 03 Oct 2015 06:50 PM

அமித் மிஸ்ராவை ஏன் தேர்வு செய்யவில்லை?- கேப்டன் தோனி விளக்கம்

அக்சர் படேலின் ஒரு ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றி தீர்மானிக்கப்பட்டதையடுத்து அவருக்குப் பதிலாக அமித் மிஸ்ராவை தேர்ந்தெடுத்திருக்கலாமே என்ற கேள்வி எழுந்ததையடுத்து தோனி விளக்கம் அளித்துள்ளார்.

ஆட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறும்போது, “மிஸ்ராவை குறிப்பிட்டு பேசும் போது, நாம் டாப் 7 வீரர்களை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும், அதில் அங்கு அவர் எங்கு பொருந்துவார் என்பது முக்கியம்.

சரியான அணிச்சேர்க்கை என்றால் 6 பேட்ஸ்மென்கள், 7-வது வீரர் கொஞ்சம் பேட்டிங் ஆட வேண்டும் அவ்வளவே. ஏனெனில் ரன்கள் நமக்கு அதிகம் தேவைப்படுகிறது.

மேலும் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறோம், இவர்கள் நன்றாக வீசி வருகின்றனர். ஆகவே யாரோ ஒரு ஸ்பின்னரை நீக்கி விட்டு மிஸ்ராவை அணியில் சேர்ப்பதற்கான பலமான காரணங்கள் இருப்பதாக நான் கருதவில்லை.

வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்கள் மட்டுமே என்பதால் ஆட்டம் நம் கையை விட்டு போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் அந்த குறிப்பிட்ட ஒரு ஓவர் நீங்கலாக அக்சர் நன்றாகத்தான் வீசினார். மேலும் டி20 கிரிக்கெட்டில் இது நிகழக்கூடியதே. தரமான பேட்ஸ்மேன் ஒருவர் செட் ஆகிவிட்டார் என்றால் நல்ல பவுலர்கள் கூட ரன்களைக் கொடுப்பது சகஜமே. அக்சர் தனது அளவு மற்றும் திசையில் சீரான முறையில் வீசினார். அவர் அதிகம் தளர்வான பந்துகளை போடுபவர் அல்ல.

நல்ல பேட்ஸ்மென்கள் பேட்டிங் சாதக ஆட்டக்களங்களில் செட்டில் ஆகிவிடும் நிலையில் அவர் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அந்த ஓரு ஓவர் நீங்கலாக அக்சர் பந்து வீச்சு குறித்து எனக்கு மகிழ்ச்சியே. அவர் பல்வேறு விதமான பந்துகளை டி20-யில் வீசுகிறார். ஆனால் பிட்ச் அவருக்கு சாதகமாக இல்லை.

பனிப்பொழிவு இருந்ததால் 3 ஸ்பின்னர்களை சேர்க்க முடியாது. மேலும் மைதானம் பெரிய மைதானமும் அல்ல. ஆகவே கலவையான விஷயங்கள் தீர்மானிக்கின்றன, நாம் கண்ணை மூடிக் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சரியல்ல எனவே ஸ்பின்னர்களை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று கூற முடியாது.

சில நாட்களில் நமது பேட்ஸ்மென்கள் சரியாக ஆடவில்லை எனும் போது, நீங்கள் கூறுவீர்கள் நாம் 7 பவுலர்களுடன் ஆட வேண்டும் என்று. நீங்கள் நிறைய விஷயங்களைப் பார்க்க வேண்டும், பிட்ச் மற்றும் சூழ்நிலைகள் பொறுத்தே சிறந்த 11 வீரர்களைத் தேர்வு செய்ய முடியும்” இவ்வாறு கூறினார் தோனி.

தோனி விளக்கம் சரியானதா?

அக்சர் படேல் பந்துவீச்சில் டுமினிக்கு ஒரு எல்.பி. கொடுக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அக்சர் படேல் வீசிய அந்த ஓவரில் ஃபுல் லெந்த் மற்றும் ஒரு மட்டரகமான ஷார்ட் பிட்ச் பந்தை வீசி 3-ம் சிக்சராகப் பறந்தது.

அதிகம் தளர்வான பந்துகளை அக்சர் வீசுபவர் அல்ல என்ற தோனியின் கூற்றை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டாலும், 3 பந்துகள் தொடர்ச்சியாக மோசமாக ஒரு சர்வதேச அளவிலான பவுலர் வீசுவது தகாது.

அஸ்வினிடமிருந்து அக்சர் பாடம் கற்கவில்லை. அஸ்வின் பந்துகளை வழக்கமாக வீசுவதை விட மெதுவே வீசினார். இதனால்தான் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார், டுமினிக்கு அஸ்வின் பந்து வீச்சு இன்னும் கூட புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அக்சர் வீசியது மிகவும் பிளாட்டான பந்து வீச்சு. பேட்ஸ்மென்களின் ரிப்ளெக்சுக்கு ஏற்ப அவர் பந்து வீசினார். ஆனால் அஸ்வின் பேட்ஸ்மென்களின் ரிப்ளெக்ஸை சற்றே மந்தப் படுத்தினார்.

அமித் மிஸ்ராவை தேர்ந்தெடுப்பது ஒரு நல்ல தெரிவே. ஆனால் ஒரு போட்டியை வைத்து அக்சர் படேலை முடிவெடுத்து விடக்கூடாது என்பதே தோனியின் நியாயமான வாதமாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x