Published : 13 Nov 2020 02:45 PM
Last Updated : 13 Nov 2020 02:45 PM
இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் எப்போதுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தொடராகவே அமைந்திருக்கிறது.
ஏனென்றால், இந்திய அணிக்கு எதிராக இளம் வீரர்களைக் களமிறக்குவதையும், புதிய வீரர்களை அறிமுகம் செய்வதையும் ஆஸ்திரேலிய அணி வழக்கமாக வைத்துள்ளது. இதற்கு முன் நடந்த பல தொடர்களில் பல வீரர்கள் அறிமுகமான நிலையில், இந்த முறை இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அறிமுகம் செய்கிறது.
அதில் அறிமுகமாகும் 5 வீரர்களில் முக்கியமானவராகப் பேசப்படுபவர் வில் ஜேன் புகோவ்ஸ். 22 வயதாகும் புகோவ்ஸ் மீதுதான் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வலதுகை பேட்ஸ்மேனான புகோவ்ஸ், தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி விளையாடக்கூடியவர். ஆஸ்திரேலியாவின் உள்நாட்டுப் போட்டிகளிலும், ஏ கிளாஸ் போட்டிகளிலும் இவரின் மிரட்டலான ஃபார்மைப் பார்த்துதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியத் தொடருக்குத் தேர்வு செய்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி பிறந்த புகோவ்ஸ், மெல்போர்னின் புறநகரான பிரிங்கடனில் பிறந்தார். அங்குள்ள பிரிங்டன் கிராமர் ஸ்கூலில் படித்தார். புகோவ்ஸ் தந்தை ஜேன், பிறப்பால் செக்கோஸ்லோவோகியா நாட்டைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்து குடியுரிமை பெற்றவர். இவரும் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக உள்நாட்டு அணிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த 2016-17ஆம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஷெப்பீல் ஷீல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விக்டோரியா அணிக்காக புகோவ்ஸ் அறிமுகமானார். அறிமுகமான முதல் தொடரிலேயே புகோவ்ஸ் தொடர்ந்து 4 சதங்கள் அடித்து அந்த சீசனில் 650 ரன்களுடன் தொடர் நாயகன் விருது வென்று அனைவரையும் பேசவைத்தார். இதற்கு முன் கடந்த 1993-94இல் குயின்ஸ்லாந்து வீரர் ஜேரி கேஸல் 568 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. அதை புகோவ்ஸ் முறியடித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும்போது தலையில் பந்து தாக்கி பல முறை தொடரிலிருந்து புகோவ்ஸ் விலகியுள்ளார். குறிப்பாக பிலிப் ஹக்ஸ் தலையில் பவுன்ஸர் வீசி உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த ஷான் அபாட்டின் பந்துவீச்சில் இரு முறை தலையில் அடிபட்டு புகோவ்ஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
அதன்பின் 2018 அக்டோபரில் நடந்த ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் விக்டோரியா அணிக்காக ஆடிய புகோவ்ஸ், மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரட்டைச் சதங்களை அடித்தார். தனது 21-வது வயதில் ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் விக்டோரியா அணிக்காக இரட்டைச் சதம் அடித்த 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இதற்குமுன் மறைந்த டீன் ஜோன்ஸ் அப்பெருமையைப் பெற்றிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் 21 வயதுக்கு முன்பாக இரட்டைச் சதம் அடித்த 9-வது வீரர் எனும் பெருமையைப் பெற்று புகோவ்ஸ் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
2019-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் தனது 21-வது வயதில் புகோவ்ஸ் தேர்வானார். ஆனால், புகோவ்ஸுக்குத் தலையில் அடிபட்டு சில உடல்நலக் கோளாறுகள் இருந்ததால், விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பாட்டர்ஸன் சேர்க்கப்பட்டார்.
உள்நாட்டுப் போட்டிகளிலும் முதல்தரப் போட்டிகளிலும் புகோவ்ஸ் சிறப்பாக விளையாடியதையடுத்து 2019-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், பிராட்மேன் இளம் கிரிக்கெட் வீரர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. 2019-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின்போது ஆஸ்திரேலிய ஏ அணியிலும் புகோவ்ஸ் இடம் பெற்றிருந்தார்.
2020-21ஆம் ஆண்டுக்கான ஷெப்பீல்ட் ஷீல்ட் சீசனில் விக்டோரியா அணிக்காக தற்போது விளையாடி வரும் புகோவ்ஸின் சிறப்பான பேட்டிங் அனைவரையும் கவர்ந்தது. கடந்த 8-ம் தேதி மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மார்கஸ் ஹாரிஸ், புகோவ்ஸ் ஜோடி சேர்ந்து 486 ரன்கள் குவித்துச் சாதனை படைத்தனர். இதில் புகோவ்ஸ் மட்டும் 255 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதற்கு முன்பாக அக்டோபர் 30-ம் தேதி தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்திலும் புகோவ்ஸ் 202 ரன்கள் குவித்தார்.
தொடக்க வரிசையில் இளம் வயதிலேயே சிறப்பாக ஆடக்கூடிய வீரராக புகோவ்ஸ் இருப்பதால், இந்தத் தொடர் அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதுவரை 22 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள புகோவ்ஸ் 1,720 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதம், 5 அரை சதங்கள் அடங்கும்.
தற்போது ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னருடன் இணைந்து களமிறங்கும் ஜோ பர்ன்ஸ் ஃபார்மில்லாமல் இருப்பதால், புகோவ்ஸ் களமிறங்கக்கூடும். உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி அருமையான ஃபார்மில் இருக்கும் புகோவ்ஸ் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு டெஸ்ட் தொடரில் பெரும் தலைவலியாக உருவெடுப்பார்.
இதேபோல இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் பிரித்விஷா மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த பிரித்விஷா காயம் காரணமாக போட்டித் தொடர் தொடங்கும் முன்பே நாடு திரும்பினார். ஆனால், இந்த முறை ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் அவரின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT