Published : 13 Nov 2020 12:44 PM
Last Updated : 13 Nov 2020 12:44 PM
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ், இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ் போன்றவர். அவரை ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
13-வது ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு ஒரே ஒரு வீரரைக் காரணமாகக் கூறலாம். அவர் சூர்யகுமார் யாதவ் என்பதில் சந்தேகமில்லை.
இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 480 ரன்கள் குவித்துள்ளார். மும்பை அணிக்காக விளையாடி 40 சராசரி வைத்துள்ள சூர்யகுமார் யாதவின் ஸ்ட்ரைக் ரேட் 145 ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பல்வேறு நெருக்கடியான தருணங்களில் மேட்ச் வின்னராக சூர்யகுமார் ஜொலித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் இந்த ஐபிஎல் சீசன் மட்டுமல்லாது, கடந்த 2018ஆம் ஆண்டு சீசனில் 512 ரன்கள், 2019ஆம் ஆண்டு சீசனில் 424 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, அதில் சூர்யகுமார் யாதவ் இல்லை எனத் தெரிந்ததும் முதலில் தனது குரலை உயர்த்தி ஆதரவு தெரிவித்தவர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் தொடர் முடிந்தநிலையிலும், சூர்யகுமார் யாதவை இந்திய அணியில் இடம்பெற மீண்டும் ஹர்பஜன் குரல் கொடுத்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் ஒரு நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங் பேசுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய கேம்-சேஞ்சராக சூர்யகுமார் யாதவ் இருந்துள்ளார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
பல்வேறு போட்டிகளில் மிகவும் பொறுப்புடன் பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். சூர்யகுமாரின் ஸ்ட்ரைக் ரேட் எப்போதும 100க்குக் குறைவாக இருந்ததும் இல்லை. அவர் சந்திக்கும் முதல் பந்திலிருந்து தொடர்ந்து தனது அதிரடியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது கடினமானது. சூர்யகுமார் அனைத்துவிதமான ஷாட்களையும் ஆடும் திறமை படைத்தவர்.
ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், கவர் ட்ரைவ், ஓவர் கவர் என அனைத்து ஷாட்களையும் சிறப்பாக ஆடுவார். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு இரண்டையும் நன்றாகக் கையாண்டு ரன்களை அடிக்கும் திறமை கொண்டவர் சூர்யகுமார். என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் டிவில்லியர்ஸ் என்று சூர்யகுமாரை அழைக்கலாம்.
இதுபோன்று வித்தியாசமான ஷாட்களை ஆடும் திறமை கொண்ட சூர்யகுமாரை நிச்சயம் ஆஸ்திரேலியத் தொடருக்குத் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஆனாலும், இந்திய அணிக்குள் சூர்யகுமார் செல்வதை யாரும் தடுக்க முடியாது. அதற்கான காலமும் வெகுதொலைவில் இல்லை. நம்பமுடியாத வியத்தகு வீரர் சூர்யகுமார் யாதவ்”.
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT