Published : 12 Nov 2020 08:29 AM
Last Updated : 12 Nov 2020 08:29 AM
ஆஸ்திேரலியாவில் 2 மாதங்களுக்கும் மேலாக சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேற்று புறப்பட்டது.
ஆஸ்திரேலியாவுடன் வரும் 27-ம் தேதி டி20 தொடரும். அதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் கடைசியாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியப் பயணம் சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த முறை 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட்டில் மட்டுமே கேப்டன் கோலி விளையாட உள்ளார். அதன்பின் அவரின் மனைவிக்கு முதல் குழந்தை பிரசவ நேரம் என்பதால், அவருக்கு பிசிசிஐ விடுப்பு அளித்துள்ளது.
ஆதலால், டெஸ்ட் தொடருக்கு ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவுக்குத் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் முழுமையாக இன்னும் குணமாகவில்லை என்பதால், அவர் நேற்று புறப்பட்ட இந்திய அணியுடன் செல்லவில்லை.
டெஸ்ட் தொடருக்கு மட்டுமே ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அதுவரை ஓய்வு எடுத்துவிட்டு அதன்பின் ஆஸ்திரேலியா புறப்படுகிறார். அதேபோல, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த விருதிமான் சாஹாவும் காயத்தில் இந்த முறை இந்திய அணியோடு செல்லவில்லை.
டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ள சாஹா, காயத்திலிருந்து குணமடைந்தபின் அணியில் இணைய உள்ளார்.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாடியதால், ஐபிஎல் தொடரை முடித்தவுடன் அனைவரும் கூடினர். இதில் ஹனுமா விஹாரி, சத்தீஸ்வர் புஜாரா மட்டும் கடந்த இரு வாரங்களுக்கு முன் துபாய் வந்து சேர்ந்தனர்.
ஐபிஎல் டி20 தொடர் செவ்வாய்க்கிழமை முடிந்த நிலையில் இந்திய அணியினர், ஆஸ்திரேலியத் தொடருக்கு நேற்று துபாயலிருந்து புறப்பட்டனர். துபாய் புறப்படும் முன் இந்திய வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அந்தப் புகைப்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில், “இந்தியா மீண்டும் வந்துவிட்டது. புதிய இயல்புக்குத் திரும்புவோம்” என்று தெரிவித்துள்ளது.
வீரர்கள் அனைவரும் பிபிஇ கிட், கையில் கையுறை, முகக்கவசம் அணிந்து பயணித்தனர். ஆஸ்திேரலியா சென்றவுடன் சிட்னியில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின், பயோ பபுளில் இந்திய அணி வந்துவிடுவார்கள். ஆஸ்திரேலியாவில் நடக்கும் அனைத்து ஆட்டங்களும் ரசிகர்கள் இன்றியே நடத்தப்படுகிறது.
நவம்பர் 27 முதல் டிசம்பர் 8-ம் தேதிவரை சிட்னி, கேன்பெராரே நகரங்களில் ஒருநாள், டி20 போட்டிகள் நடக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT