Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
இந்தியாவின் மிகப் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று என்ற பெருமை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு உண்டு. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம், டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக சேப்பாக்கம் மைதானம் கட்டப்பட்டது. 1916-ம் ஆண்டு முதல் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
7.52 லட்சம் சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம், முதலில் ‘மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் கிரவுண்ட்’ என்றுதான் அழைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான எம்.ஏ.சிதம்பரத்தின் பெயர் இந்த மைதானத்துக்கு சூட்டப்பட்டது. 1934-ம் ஆண்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மெட்ராஸ் மற்றும் மைசூரு அணிகள் மோதின.
2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக 2009-ம் ஆண்டு இந்த மைதானம் நவீன முறையில் மாற்றிக் கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வகையில் இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை வழங்கிய மைதானம் என்ற பெருமை சேப்பாக்கம் மைதானத்துக்கு உண்டு. 1952-ம் ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தங்கள் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. சேப்பாக்கம் மைதானம் இந்திய அணிக்கு மட்டுமின்றி இந்திய வீரர்களுக்கும் ராசியானதாக உள்ளது. இங்கு இந்திய வீரர்கள் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சுனில் கவாஸ்கர், 30-வது சதத்தை அடித்து டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தது சேப்பாக்கம் மைதானத்தில்தான். 1983-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT