Published : 11 Nov 2020 08:28 AM
Last Updated : 11 Nov 2020 08:28 AM
2020-ம் ஆண்டுக்கான 13-வது ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை 5-வது முறையாகவும், தொடர்ந்து 2-வது முறையாகும் கைப்பற்றி நடப்பு சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.
ரோஹித் சர்மாவின் ‘மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்’, டிரன்ட் போல்ட்டின் மிரட்டல் பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது.
ரோஹித் சர்மா தலைமையிலும், ஒட்டுமொத்தத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இதில் சிறப்பு என்னவென்றால், ரோஹித் சர்மா ஒரு வீரராக சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றும், கேப்டனாக 5 சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்னமும் கூட ரோஹித் சர்மாவை இந்திய ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக்காதது வெட்கக்கேடு என்று கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.
ஈஎஸ்பின் கிரிக் இன்போவில் கவுதம் கம்பீர் கூறியது:
குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக இன்னமும் ரோஹித் சர்மாவை நியமிக்காதது வெட்கக்கேடு. இனியும் அவருக்கு கேப்டன் பொறுப்பை அளிக்கவில்லை எனில் அது துரதிர்ஷ்டம்.
ரோஹித்தை கேப்டனாக நியமிக்காதது இந்திய அணியின் துரதிர்ஷ்டமே தவிர அவரது துரதிர்ஷ்டம் அல்ல. தோனி எப்படி இந்திய அணியின் சிறந்த கேப்டனோ அதே போல்தான் ரோஹித் சர்மாவும் சிறந்த கேப்டன்.
ஒருவரை கேப்டனாக நியமிக்க அளவுகோல்கள் என்ன? ரோஹித் சர்மா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். இனியும் அவரை கேப்டனாக்காமல் இருந்தால் அது பெரிய ஷேம். விராட் கோலியை ஒரு வடிவத்துக்கும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் ரோஹித்தையும் கேப்டனாக்க வேண்டும், கேப்டன்சியைப் பிரித்துக் கொடுப்பதனால் ஒரு தீங்கும் ஏற்பட்டு விடாது.
மேலும் விராட் கோலியை விட வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா சிறந்த கேப்டன்.
யார் கேப்டனாக தகுதியுடையவர்கள் என்பதற்கான அளவு கோல்கள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் கவுதம் கம்பீர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT