Published : 09 Nov 2020 05:47 PM
Last Updated : 09 Nov 2020 05:47 PM
ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் இந்திய அணியில் திடீரென பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ நிர்வாகம் செய்துள்ளது. விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார். தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி காயத்தால் விலகிய நிலையில், வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயத்தால் அவதிப்பட்ட ரோஹித் சர்மா உடல்நலம் தகுதி பெற்றதையடுத்து, டெஸ்ட் தொடரில் கோலிக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி 2020 நவம்பர் முதல் 2021 ஜனவரி வரை 3 மாத காலம் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 27 முதல் 2021 ஜனவரி 19-ம் தேதிவரை இந்திய அணி ஆஸி.யில் பயணம் மேற்கொள்கிறது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை கடந்த மாதம் 26-ம் தேதி பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்தது. ஆனால், அந்த அணியில் இடம்பெற்ற பல்வேறு வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டதையடுத்து, அணி திருத்தப்பட்டு புதிய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, விராட் கோலி- அனுஷ்கா சர்மாவுக்கு முதல் குழந்தை வரும் 2021 ஜனவரி முதல் வாரத்தில் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் விராட் கோலி மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதால், விராட் கோலிக்கு டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் மட்டும் கோலி விளையாடுவார். மற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் கோலி விளையாடமாட்டார். டிசம்பர் 17-ம் தேதி முதல் டெஸ்ட் அடிலெய்டில் தொடங்குகிறது. இந்தப் போட்டி முடிந்தவுடன் கோலி இந்தியா புறப்படுவார்.
ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து உடல்தகுதி வல்லுநர்கள் கண்காணித்து வருகின்றனர். ஆதலால், ஒருநாள், டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, டெஸ்ட் தொடரில் மட்டும் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடருக்குள் ரோஹித் சர்மா முழு உடல்தகுதி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவும் காயத்திலிருந்து குணமடைந்துள்ளார். அவர் உடற்தகுதிப் பரிசோதனையில் தேறியவுடன், இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார்.
தமிழக வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான வருண் சக்ரவர்த்தி டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தமிழக வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
சஞ்சு சாம்ஸன் முதலில் டி20 தொடரில் மட்டும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக, ஒரு நாள் அணியிலும் கூடுதல் விக்கெட் கீப்பர் எனும் முறையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள விர்திமான் சாஹாவுக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டெஸ்ட் அணியில் சாஹா இடம் பெற்றிருந்தாலும், அவர் குணமடையாத நிலையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.
டெஸ்ட் அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்மான் சாஹா, ரிஷப் பந்த், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் ஷைனி, குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகமது சிராஜ்.
ஒருநாள் அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ரவிந்திர ஜடேஜா, யஜூவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, சர்துல் தாக்கூர். சஞ்சு சாம்ஸன்.
டி20 அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்ஸன், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யஜூவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, தீபக் சாஹர், டி.நடராஜன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT