Published : 07 Nov 2020 12:51 PM
Last Updated : 07 Nov 2020 12:51 PM
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு அவுட் வழங்கப்பட்டவிதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகியுள்ளது.
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்தத் தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியது. சன்ரைசர்ஸ் அணி 2-வது தகுதிச்சுற்றில் நாளை டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.
அபுதாபியில் ஆர்சிபி அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு அவுட் வழங்கப்பட்ட விதம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
ஆர்சிபி பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய 6-வது ஓவரில் வார்னர் கையில் பட்டு விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ் பிடித்ததாகக் கூற அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், கள நடுவர் எஸ்.ரவி அவுட் வழங்க மறுத்துவிட்டார். இந்த முடிவை எதிர்த்து டிஆர்எஸ் முறையில் கோலி, 3-வது நடுவரை நாடினார்.
மூன்றாவது நடுவர் வீரேந்திர சர்மா, தனது தீர்ப்பில் வார்னர் கிளவுஸில் பந்து பட்டுச் சென்றதாகக் கூறி அவுட் வழங்கப்பட்டது. ஆனால், உண்மையில் பந்து கிளவுஸில் படவில்லை. பட்டதற்கான உறுதியான காட்சிகள் பல்வேறு கோணங்களில் காண்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், சந்தேகத்துக்கு இடமானதாகவே பந்து கிளவுஸில் பட்டது தெரியவந்தது. இருப்பினும் வார்னருக்கு மூன்றாவது நடுவர் அவுட் வழங்கினார்.
கிரிக்கெட் விதிமுறையின்படி சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். ஏனென்றால், அவருக்கு அடுத்த வாய்ப்பு ஏதும் இல்லை. ஆனால், பந்துவீச்சாளருக்கு உண்டு என்பதால், சந்தேகமாக இருக்கும் முடிவுகள் பேட்ஸ்மேனுக்குச் சாதகமாகச் செல்லும். ஆனால், வார்னருக்கு அவுட் வழங்கப்பட்டது.
இந்த முடிவை ஆங்கில வர்ணனையில் இருந்த மாங்க்வா கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “வார்னர் அவுட் என்பதற்கான ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமாகவே இருக்கின்றன. கள நடுவரும் அவுட் வழங்கவில்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு 3-வது நடுவர் அவுட் வழங்கினார். இதற்கு அவுட் வழங்கியிருக்க கூடாது” எனத் தெரிவித்தார்.
இதற்கு நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “வார்னருக்கு வழங்கப்பட்ட அவுட் நம்பமுடியாமல் இருக்கிறது. டேவிட் வார்னர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என்பதற்காக இப்படியா அவுட் வழங்குவது? உண்மையான முடிவு என்பது வார்னர் அவுட் இல்லை என்பதுதான். ஆனால், உறுதியில்லாத ஆதாரங்களின் அடிப்படையில் எவ்வாறு அவுட் வழங்க முடிந்தது” என விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT