Published : 06 Nov 2020 11:40 AM
Last Updated : 06 Nov 2020 11:40 AM
ஐபிஎல் 2020 கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்றில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஊதியது மும்பை இந்தியன்ஸ்.
தொடக்கத்தில் அஸ்வின் அற்புதமாக வீசி ரோஹித் சர்மாவை வீழ்த்தினார், பிறகு சூரிய குமார் யாதவ், டி காக் அதிரடி காட்டி ரோஹித் இழப்பை மறக்கடித்தாலும் டி காக் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்த ஒரு 4 ஓவர்கள் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பையைக் கட்டுப்படுத்தினர்.
ஆனால் கடைசி 6 ஒவர்களில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா வெளுத்து வாங்கினர். இதில் 7 சிக்சர்களை இருவரும் வாங்கினர். ரபாடா, நார்ட்யே கூட சரியாக வீசவில்லை, இதனால் 200 ரன்களுக்குச் சென்றது, கடைசியில் பும்ரா, போல்ட் பந்து வீச்சில் நிற்க முடியாமல் டெல்லி தோற்றது.
இந்நிலையில் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கடுப்புடன் கூறும்போது, “முதல் ஓவரிலேயே 15-16 ரன்கள் என்றால் நேரடியாக நாம் தடுப்பு மனோபாவத்துக்குள் தள்ளப்படுவோம்.
ஆனால் மீண்டும் போராடி அவர்களைக் கட்டுப்படுத்தினோம். 7-14 ஓவர்கள வரை கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தோம். எங்களுக்குச் சாதகமாகவே இருந்தது. அவர்கள் 120/4 என்று இருந்தனர், 170 ரன்கள்தான் அடித்திருக்க வேண்டும். அது எங்கள் ரீச்சில் இருக்கும் இலக்கு.
ஆனால் கடைசி 5-6 ஓவர்களில் எங்களது பந்து வீச்சு பல மைல்கள் தொலைவுக்கு மோசமாக இருந்தது. தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுக்கு எங்கு போடட்டும் என்று கேட்டுக் கேட்டுப் போட்டுக் கொடுத்தோம்.
இஷான் கிஷனும் எங்கள் பிடியிலிருந்து நழுவினார். ஆனால் இஷான் கிஷன் இந்தத் தொடரில் நன்றாக ஆடுகிறார். மும்பைக்கு எதிராக நாங்கள் ஆடிய போட்டிகளிலும் இஷான் கிஷன் நன்றாக ஆடினார்.
நாங்கள் நன்றாகத் திட்டமிட்டோம், தெளிவாகவே திட்டமிடுகிறோம் ஆனால் செயல்படுத்துவதில் கோட்டை விட்டோம்.
பேட்டிங்கில் பிரிதிவி ஷாவுக்கு அருமையான பந்து விழுந்தது. அஜிங்கிய ரஹானேவுக்கும் அந்த பந்து அருமையாக உள்ளே ஸ்விங் ஆனது. தவணுக்கு பும்ரா வீசிய யார்க்கர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ரகம்.
இப்படி ஆட்டம் முழுதும் மும்பை எங்களை விட சிறப்பாக ஆடினர். இந்த தொடரில் 3 வெற்றிகளை எங்களுக்கு எதிராக மும்பை பெற்றுள்ளனர்.
அடுத்த போட்டிக்கு முன்பாக 2 நாட்கள் உள்ளன. யார் எதிராக வரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். குறுகிய காலத்துக்குள் வழிமுறைகளை ஆராய வேண்டும்” என்றார் பாண்டிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT