Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி நேற்று 32 வயதில் காலடி எடுத்து வைத்தார். பெங்களூரு அணி ஏற்பாடு செய்த கொண்டாட்டத்தில் கேக் வெட்டிய கோலி.

அபுதாபி

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றின் கடைசி வாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மாறுபட்ட அதிர்ஷ்டங்களை எதிர்கொண்டிருந்தன.

பெங்களூரு அணி கடைசி 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த போதிலும் பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்தது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றில் கால் பதித்தது.

கடந்த 2013 முதல் ஒவ்வொரு ஐபிஎல் பதிப்பிலும் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போதெல்லாம், எந்த அணியும் ஒருவருக்கொருவர் எதிர்த்து 2 முறை வெற்றி பெறவில்லை. விதிவிலக்காக 2016-ம் ஆண்டு தொடரில் மட்டும் ஹைதராபாத் அணி இரு முறை வெற்றி கண்டிருந்தது. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் ஹைதராபாத் அணியின் வெற்றி கணக்கு 8-7 என முன்னேற்றத்துடன் இருப்பதற்கு இதுவே காரணம்.

கடந்த 2016-ம் ஆண்டு சீசனில் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதன் மூலம் எலிமினேட்டர் சுற்றை கடந்து பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையையும் ஹைதராபாத் அணி படைத்திருந்தது.

அதேபோன்ற ஒரு செயல்திறனை தற்போது மீண்டும் மீட்டெடுக்கும் முனைப்பில் உள்ளது டேவிட் வார்னரின் படை. அந்தத் தொடரில் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை ஹைதராபாத் அணி காயப்படுத்தி இருந்தது. இதை மீண்டும் ஒருமுறை நிகழ்த்துவதில் ஹைதராபாத் அணி தீவிரம் காட்டக்கூடும்.

விராட் கோலியை பொறுத்த வரையில் ஐபிஎல் தொடரில் பட்டம் வெல்லும் கனவு கானல் நீராகவே உள்ளது. இம்முறை பெங்களூரு அணியின் கனவு மெய்ப்பட வேண்டுமென்றால் முதலில் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியாக வேண்டும். பேட்டிங்கில் இளம் வீரரான தேவ்தத் படிக்கல் சீரான முறையில் பங்களிப்பு செய்து வருகிறார்.

விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரும் மட்டையை சுழற்றினால் வலுவான ஸ்கோரை குவிக்கலாம். இன்றைய ஆட்டத்தில் தொடக்க பேட்டிங்கில் ஆரோன் பின்ச்சுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படக் கூடும். பந்து வீச்சில் இஸ்ரு உதனா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பலம் சேர்க்கக் கூடியவர்களாக உள்ளனர்.

இன்றைய ஆட்டம்

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x