Published : 04 Nov 2020 03:29 PM
Last Updated : 04 Nov 2020 03:29 PM
ரோஹித் சர்மாவுக்கு பெரிய காயம் என்று மருத்துவர்கள் அறிக்கை கூறுகிறது, மருத்துவ அறிக்கை அணித்தேர்வுக்குழுவுக்கு சமர்ப்ப்பிக்கப்பட்டது, அதில், ‘ரோஹித் சர்மா ஆடினால் அவர் தீவிர காயமடையும் அபாயம்’ இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது என்று ரவிசாஸ்திரி கூறியதோடு தனக்கும் அணித்தேர்வுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியதை சேவாக் கண்டித்துள்ளார்.
சேவாக், முன்னாள் இந்திய வீரர் 1983 உலகக்கோப்பை நாயகன் மொஹீந்தர் அமர்நாத்தின் சீடர், எனவே அவரைப்போலவே இவரும் வெளிப்படையாக விஷயங்களைப் போட்டு உடைக்கக் கூடிய நேர்மை கொண்டவராக சேவாக் அறியப்பட்டவர்.
இந்நிலையில், ரோஹித் சர்மா காயம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூற அவரோ சன் ரைசர்ஸுக்கு ஆடிவிட்டு தான் காயத்திலிருந்து குணமடைந்து விட்டேன், இன்னும் சில போட்டிகளில் ஆடப்போகிறேன் என்கிறார், இது என்ன குழப்பம், ஒரு தெளிவில்லையா, மொத்தமாக மோசமான நிர்வாகம் என்று பிசிசிஐ-ஐ சேவாக் சாடியுள்ளார்.
கிரிக்பஸ் இணையதளத்துக்கு சேவாக் கூறும்போது, “ரவி சாஸ்திரிக்கு தெரியாது என்பதெல்லாம் சும்மா, அதற்குச் சாத்தியமில்லை. தேர்வுக்கும் ரவி சாஸ்திரிக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கலாம் ஆனால் ரோஹித் சர்மா குறித்து தேர்வுக்குழுவினர் ரவி சாஸ்திரியிடம் ஆலோசிக்காமல் இருக்க வாய்ப்பேயில்லை. அவரிடம் ஆலோசித்து அவரது கருத்துக்களை கேட்காமல் இருக்க வாய்ப்பில்லை.
அவர் காயமென்றால் இந்நேரம் மாற்று வீரர் அல்லவா இருப்பார்? ஆனால் இந்திய அணியில் இல்லை, இதை என்னால் புரிந்து கொள்ல முடியவில்லை. இது ஒரு விசித்திரமான ஆண்டு. சன் ரைசர்ஸுக்கு எதிராக ரோஹித் சர்மா ஆடினார். பிளே ஆஃப் போட்டிகளிலும் ஆடப்போகிறார்.
நான் உடற்தகுதியுடன் தான் இருக்கிறேன் என்கிறார் ரோஹித், பின் ஏன் அவரை இந்திய அணியில் எடுக்கவில்லை?
அதெப்படி தனியார் அணிக்கு ஆடமுடியக்கூடிய நிலையில் இருக்கும் ரோஹித், ஏன் தேசிய அணியில் இல்லை? இது ஆச்சரியமானது, அதே சமயத்தில் பிசிசிஐயின் மோசமான நிர்வாகமே. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆட முடியும் என்றால் ஏன் இந்திய அணிக்கு ஆட முடியாது. அவரை அணியில் சேர்த்திருக்க வேண்டும்” என்று கூறுகிறார் சேவாக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT