Published : 03 Nov 2020 04:10 PM
Last Updated : 03 Nov 2020 04:10 PM
அரசியல் பலிகடாவாக கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டும் மாறக்கூடாது. இந்தியா, பாகி்ஸ்தானைச் சேர்ந்த இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும், இரு நாட்டு டி20 லீக் தொடர்களில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியல் டி20 லீக் போட்டித் தொடரில் கல்லே கிளாடியேட்டர் அணியின் பயிற்சியாளாக வாசிம் அக்ரம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
உலகளவில் டி20 கிரிக்கெட் வந்தபின்புதான் ஏரளமான இளம் கிரிக்கெட் வீரர்கள், அனுபவமான வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களைச் சேர்க்கிறார்கள், பந்துவீச்சாளர்கள் புத்தாக்க சிந்தனையுடன் பந்துவீசுகிறார்கள், பீல்டிங் சிறந்த தரத்துக்கு உயர்ந்துள்ளது. அனைத்துக்கும் டி20 போட்டிக்கு நன்றி.
கரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் 90 சதவீத விளையாட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. லைவ்வாக நடக்கும் போட்டிகளைக் காண மக்கள்ஆர்வமாக இருக்கிறார்கள். கரோனா வைரஸ் பாதிப்பால் அரங்கில் ரசிகர்கள் இல்லாத சூழலில் போட்டி நடத்தப்படுவதால், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பார்வையாளர்கள் அளவு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தை 20 கோடி ரசிகர்கள் பார்த்து ரசித்தது என்பது மிகப்பெரிய விஷயம், உலகில் எந்த போட்டியையும் இந்த அளவுக்கு ரசிகர்கள் பார்த்தது இல்லை.
அரசியல் பலிகடாவாக கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டும் இருந்துவிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆனால், இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது என்பது இரு நாட்டு அரசுகள் தொடர்பானது, என்பதால், நான் எந்தக் கருத்தும் கூற முடியாது.
ஆனால் ஐபிஎல் என்பது உலகிலேயே மிகவும் பிரபலமான அதிகமான போட்டி நிறைந்தத் தொடர். ஐபிஎல் தொடரில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் வீரர்களும் பங்கேற்க வேண்டும், அதேபோல இந்தியாவைச் சேர்ந்த வீரர்களும் பாகிஸ்தான் லீக்கில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம்.
விராட் கோலியையும், பாபர் ஆசத்தையும் தற்போது ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல, அதைநான் விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் மிகச்சிறந்த திறமையுள்ள வீரர். அனைத்து விதமான போட்டிகளிலும் தனது திறமையை பாபர் வெளிப்படுத்தினாலும் அதில் நிலைத்தன்மையில்லை.
நேர்முறையான முறையில் ஒப்பிடுவதாக இருந்தால் விராட் கோலி போன்று அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் நிலைத்தன்மையான பேட்டிங்கை பாபர் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு வாசிம்அக்ரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT