Published : 02 Nov 2020 06:05 PM
Last Updated : 02 Nov 2020 06:05 PM
அபுதாபியில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டமே ப்ளே ஆஃப் சுற்றுககுள் எந்த அணி செல்லும் என்பதைத் தெளிவாகச் சொல்லும் ஆட்டமாக அமையப் போகிறது.
ஐபிஎல் தொடக்கத்திலிருந்து சிறப்பாக ஆடி முதலிடத்திலும், 2-வது இடத்திலும் மாறி, மாறி அமர்ந்த டெல்லி அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியால் துவண்டுள்ளது. இன்று நடக்கும் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்குக் கட்டாய வெற்றி அவசியம்.
அதேபோல, கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் ஆர்சிபி அணிக்கு இது சிறந்த வாய்ப்பு. ஆதலால், இரு அணிகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும்.
முதல் கணக்கீடு
டெல்லி கேபிடல்ஸ் ப்ளே ஆஃப் சுற்றில் 2-வது இடம் பிடிக்க வேண்டுமானால், இன்று நடக்கும் ஆட்டத்தில் 160 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணியை 121 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அல்லது சேஸிங் செய்வதாக இருந்தால், 161 ரன்கள் அதற்கு மேல் உள்ள ரன்களை 17.3 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும்.
நிபந்தனை, நாளை நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணியை சன்ரைசர்ஸ் வெல்ல வேண்டும்.
இவ்வாறு நடந்தால் டெல்லி அணி 16 புள்ளிகள் பெறும். அதேசமயம், ஆர்சிபி அணியின் நிகர ரன் ரேட்டும் கொல்கத்தா அணியை விட அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஆர்சிபி தோற்றும் 4-வது இடத்தைப் பிடிக்க முடியும். அதேசமயம், மும்பை அணியை சன்ரைசர்ஸ் வீழ்த்தினாலே கொல்கத்தா வெளியேறிவிடும்.
இவ்வாறு நடந்தால் மும்பை, டெல்லி, சன்ரைசர்ஸ், ஆர்சிபி அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் மோதும்.
2-வது கணக்கீடு
டெல்லி கேபிடல்ஸ் அணி 160 ரன்கள் சேர்த்து 22 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வெல்ல வேண்டும். சேஸிங் செய்தால் 161 ரன்களை 17.2 ஓவர்களுக்குள் வெல்ல வேண்டும்.
நிபந்தனை, நாளை நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணியை சன்ரைசர்ஸ் வெல்ல வேண்டும். ஆனால், ஆர்சிபியின் நிகர ரன் ரேட் கொல்கத்தா ரன் ரேட்டை விடக் குறைந்து, சன்ரைசர்ஸ் நாளை வெற்றி பெற்றால், ஆர்சிபி வெளியேறும் கொல்கத்தா ப்ளே ஆஃப் வாய்ப்பு பெறும். சன்ரைசர்ஸ் அணி 3-வது இடத்தைப் பிடிக்கும்.
இந்தக் கணக்கீட்டின்படி மும்பை, டெல்லி, சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிகள் ப்ளே ஆஃப் செல்லும்.
3-வது கணக்கீடு
ஆர்சிபி 160 ரன்கள் சேர்த்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அல்லது 161 ரன்களை 18 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும்.
நிபந்தனை, நாளை நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணியை சன்ரைசர்ஸ் வெல்ல வேண்டும்.
ஆர்சிபி அணி வெற்றி பெற்று 2-வது இடத்துக்குச் சென்றுவிடும். ஆனால், டெல்லி அணியின் நிகர ரன் ரேட்படி கொல்கத்தாவை விட அதிகமாகவே வைத்திருக்கும். இந்தச் சமயத்தில் நாளைய ஆட்டத்தில் மும்பையை சன்ரைசர்ஸ் வீழ்த்தினால், கொல்கத்தா வெளியேறிவிடும்.
இதன்படி பார்த்தால், மும்பை, ஆர்சிபி (2-வது இடம்) சன்ரைசர்ஸ் , டெல்லி (4-வது இடம்) ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் செல்லும்.
4-வது கணக்கீடு
ஆர்சிபி அணி முதலில் பேட் செய்து 160 ரன்கள் சேர்த்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். சேஸிங் செய்தால் 161 ரன்களை 17.5 ஓவர்களில் சேர்க்க வேண்டும்.
நிபந்தனை, நாளை நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணியை சன்ரைசர்ஸ் வெல்ல வேண்டும்.
ஆர்சிபி அணி 19 ரன்கள் வித்தியாத்தில் வென்றுவிட்டால், அல்லது சேஸிங்கில் 17.5 ஓவர்களில் அடைந்துவிட்டால், டெல்லி அணியின் நிகர ரன் ரேட் கொல்கத்தாவை விட கீழாகச் செல்லும்.
அப்போது சன்ரைசர்ஸ் அணி மும்பை வெல்லும் பட்சத்தில் கொல்கத்தா இயல்பாகவே 4-வது இடத்தைப் பிடிக்கும்.
இந்தக் கணக்கின்படி, மும்பை, ஆர்சிபி, சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும்.
5-வது கணக்கீடு
இந்தக் கணக்கீட்டின்படி, டெல்லி அணி இன்று ஆர்சிபி அணியை வீழ்த்த வேண்டும். நாளை நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை மும்பை தோற்கடிக்க வேண்டும்.
சன்ரைசர்ஸ் அணி மும்பையிடம் தோற்றால், தொடரிலிருந்து வெளியேறும். கடைசி 4 இடங்களில் இருக்கும் அணிகள் அதாவது ஆர்சிபி, கொல்கத்தா 3,4-வது இடத்துக்குள் வரும். 3, 4-வது இடங்கள் இன்று நடக்கும் ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து அமையும்.
இந்தக் கணக்கீட்டின்படி, ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆர்சிபி அணிகள் வரும்.
6-வது கணக்கீடு
ஆர்சிபி அணி டெல்லியை வீழ்த்த வேண்டும். நாளை நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை மும்பை அணி வெல்ல வேண்டும்.
ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் வென்று, நாளைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் தோற்றால் கொல்கத்தா, டெல்லி அணிகள் 3-வது 4-வது இடத்தைப் பெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT