Published : 02 Nov 2020 03:04 PM
Last Updated : 02 Nov 2020 03:04 PM
நடப்பு ஐபிஎல் தொடரில் ஜெர்சியில் தோனி கையெழுத்துப் போட்டு எதிரணி வீரர்களுக்கு வழங்கியது பலருக்கும் அவர் ஓய்வு பெறுகிறாரோ என்ற ஐயத்தை எழுப்ப தோனியோ தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று தன் ரசிகர்களின் அச்சத்தைப் போக்கினார்.
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி ஆடப்போவது உறுதியானது. இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் ஐபிஎல் கிரிக்கெட்டை தொடர்ந்து ஆவலுடன் பார்த்து கருத்துக்களை பதிவிட்டு வரும் மைக்கேல் வான், 2021 ஐபிஎல் தொடரும் யுஏஇ-யில் நடந்தால், தோனி 2022-ல்தான் ஓய்வு பெறுவார் என்று ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
“நிகழ்ந்து வரும் பேச்சுக்களைப் பார்த்தால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரும் யுஏஇ-யில்தான் நடக்கும் போல் தெரிகிறது. அப்படி நடந்தால் 2022 ஐபிஎல் வரை தோனி ஆடியே ஆக வேண்டும்.
ஏனெனில் ஆளில்லா மைதானத்தில் தோனி போன்ற ஒரு மிகப்பெரிய வீரர் ஓய்வு பெறுவது சரியாக இருக்காது.
2022 தொடரில் ஒரு போட்டியிலாவது ஆடி அவர் தன் ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெறுவதுதான் சரியாக இருக்கும். ஒரு பெரிய ரசிகர்பட்டாளம் முன்னிலையில் மைதானத்தில் பெரிய கூட்டத்துக்கு இடையே ஓய்வு பெறத் தகுதியுடைய ஒரே வீரர் தோனிதான்.
அப்படி அவரால் விளையாட முடியாமல் போனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கண்காணாமல் குட் பை சொல்லும் நடைமுறையையே அவர் தேர்ந்தெடுக்க நேரிடும். அது துரதிர்ஷ்டவசமானதாகவே இருக்கும்” என்கிறார் மைக்கேல் வான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT