Published : 01 Nov 2020 04:36 PM
Last Updated : 01 Nov 2020 04:36 PM
2020-ம் ஆண்டு எனது கடைசி ஐபிஎல் தொடர் அல்ல, அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவி்த்தார்.
13-வது ஐபிஎல் சீசன் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடன் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் ஒருமுறை கூட ப்ளே ஆஃப் செல்லாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது இல்லை.
ஆனால், முதல்முறையாக இந்த சீசனில் ப்ளே ஆஃப் செல்லாமல் தொடரிலிருந்து வெளியேறுகிறது. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி வெளியேறும் நிலையில் அந்த அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது, மூத்த வீரர்களை அதிகமாக தேர்வு செய்தது, ரெய்னா, ஹர்பஜன் இல்லை என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அடுத்த ஆண்டு பெரியஅளவில் சிஎஸ்கே அணியில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது, தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ்போடும் நிகழ்வில் தோனி, கே.எல்.ராகுல் பங்கேற்றனர்.
அப்போது, வர்ணனையாளரும் நியூஸிலாந்து முன்னாள் வீரர் டேனி மோரிஸன், தோனியிடம் “ அடுத்த முறை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடுவீர்களா அல்லது இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா”எனக் கேட்டார்.
அதற்கு தோனி, “ நிச்சயமாக கிடையாது, சிஎஸ்கே அணியில் அடுத்த ஆண்டும் விளயாடுவேன்” எனத் தெரிவித்தார். இதனால் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா அல்லது திடீரென ஓய்வு அறிவிப்பாரா என்று கையை பிசக்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தோனியிடமிருந்தே பதில் கிடைத்துள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் – மே மாதங்களில் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு கரோனா தொற்று இந்தியாவில் குறைந்துவிடும் என்று நம்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT