Last Updated : 31 Oct, 2020 04:39 PM

 

Published : 31 Oct 2020 04:39 PM
Last Updated : 31 Oct 2020 04:39 PM

ரோஹித் சர்மாவின் உடற்தகுதியை நாளை ஆய்வு செய்கிறது பிசிசிஐ மருத்துவக் குழு: ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்?

ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்ட காட்சி : படம் ஏஎன்ஐ

துபாய்

இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ மருத்துவக் குழுவினர் நாளை பரிசோதனை செய்கின்றனர். இந்த பரிசோதனைக்கு பின் ஆஸ்திரேலியத் தொடருக்கு பிற்பகுதியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதா அல்லது நீண்ட ஓய்வு தேவைப்படுமா என்பதை அறிவிப்பார்கள்.

அதேசமயம், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா அடுத்து வரும் ஆட்டங்களில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதியில்லை என்பதால் அடுத்த சில நாட்களில் மும்பை அணி முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 18-ம் தேதி நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கடைசியாக ரோஹித் சர்மா விளையாடினார். இரு சூப்பர் ஓவர்கள் வரை சென்று மும்பை அணி தோற்றது. அந்தப் போட்டியின் 2-வது சூப்பர் ஓவரின்போது ரோஹித் சர்மாவுக்கு இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

23-ம் தேதி சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் மும்பை அணியின் கேப்டனாக பொலார்ட் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அப்போது இருந்து இதுவரை எந்தவிதமான ஆட்டத்திலும் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. மும்பை அணியின் கேப்டனாக பொலார்ட் செயல்பட்டு வருகிறார்.

காயத்திலிருந்து குணமடைந்து ரோஹித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற வீடியோ மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்டது. ஆனால், அடுத்த 2 மணி நேரத்தில் ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஒருநாள், டி20, டெஸ்ட் என எந்த அணியிலும் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை.

இதனால் ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்த மர்மம் நீடித்து வருகிறது. இதுவரை அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரம், தன்மை குறித்து மும்பைஇந்தியன்ஸ் நிர்வாகம் வாய் திறக்கவில்லை. இந்த சூழலில் பிசிசிஐ மருத்துவக் குழுவினர் ரோஹித் சர்மா உடல்நிலையை ஆய்வு செய்யஉள்ளனர்.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ரோஹித் சர்மா உடல் நிலை குறித்து நவம்பர் 1-ம் தேதி பிசிசிஐ மருத்துவக் குழுவினர் அவரை ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வுக்குப்பின் ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்த விவரம் தெரிந்துவிடும்.

பொதுவாக தொடைப்பகுதியின் பின்பகுதியில் கிரேடு-2 தசைநார் கிழிவு ஏற்பட்டால் கூட வழக்கமான ஷாட்களையும் விளையாடுவதிலும் சிரமம் இருக்காது. ஆனால், விக்கெட்டுகளுக்கு இடையே விரைவாக ரன்களை ஓடி எடுப்பதில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

தொடைப்பகுதியில் இருக்கும் தசைநார்தான் வீரர்கள் விரைவாக ஓடுவதற்கும், திடீரென ஓடும் வேகத்தைக்குறைத்து நிற்கவும் உதவுகிறது. இதில் பிரச்சினை ஏற்பட்டால் ரன்களை ஓடி எடுக்க முடியாது. ஆதலால், ஹேம்ஸ்ட்ரிங் காயம் எந்த அளவுக்கு ரோஹித் சர்மாவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. முழுமையாக இந்தக் காயத்திலிருந்து குணமடைந்துவிட்டால் ஓடுவதில் எந்த சிரமமும் இருக்காது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பையிலிருந்து வெளியாகும் மிட் டே நாளேடு வெளியிட்ட செய்தியில், “ ரோஹித் சர்மாவுக்கு தொடைப்பகுதியின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரமாக இருப்பதால், அவர் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்குவாய்ப்பி்லலை. ரோஹித் சர்மா அணியிலிருந்து விலகினால் அது எதிரணிக்கு தார்மீக ரீதியாக வலுவடையச் செய்துவிடும் என்பதால் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மா உடல்நிலை குறித்து அறிவிக்க காலம் தாழ்த்துகிறது.

ரோஹித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது என்பது வேறு, விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவது என்பது வேறு. ரோஹித் சர்மாவால் தற்போது ஓடுவதில்தான் சிக்கல் நீடிக்கிறது. ஆதலால், மீதமிருக்கும் ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கு வாய்ப்பு இருக்காது. அதற்கான அறிவிப்பை அடுத்தவாரத்தில் மும்பை அணி வெளியிடலாம்” எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x