Published : 30 Oct 2020 03:20 PM
Last Updated : 30 Oct 2020 03:20 PM

தான் சரியான வீரர் என்பதை எங்களுக்கு ருதுராஜ் காட்டி விட்டார்: தோனி கூறியதை ‘ரிபீட்’ செய்த ஸ்டீபன் பிளெமிங்

வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவும் அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதையும் விரும்புகிறோம் என்று இளம் வீரர்கள் பற்றி தோனி கூறியதை அப்படியே‘ஒன்மோர் ரிபீட்’ அடித்து தன் பேட்டியில் கூறினார் சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்.

சமீப காலங்களாக தனக்கென ஒரு சொந்தக் கருத்தையும் வைத்துக் கொள்ளாமல், தோனி கூறுவதை அப்படியே ரிபீட் செய்து எதிரொலிப்பதையே ஸ்டீபன் பிளெமிங் செய்து வருகிறார். தோனி புரோசஸ் என்றால் இவரும் புரோசஸ் என்கிறார். தோனி கோவிட் 19 என்றால் இவரும் கோவிட் 19 என்கிறார்.

ரெய்னா வெளியேறிய போதும் அவர் கூறியதையே இவரும் கூறினார். பயிற்சியாளராக உத்தி ரீதியாக என்ன மாற்றம் செய்தோம் என்று கொஞ்சம் டெக்னிக்கலாக நுட்பமாக பேசினால் நன்றாக இருக்கும். சச்சின் டெண்டுல்கரெல்லாம் அப்படித்தான் கிரிக்கெட்டின் நுணுக்கத்தை நமக்கு பகிர்ந்தளிக்கிறார்.

இந்நிலையில் நேற்றைய ஐபிஎல் போட்டியின் ஆட்ட நாயகனான ருதுராஜ் பற்றி ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

ருதுராஜ் கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக ஆடினார். வாய்ப்பை அவர் இறுகப் பற்றிக் கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. கோவிட் 19-னால் அவருக்கு வாய்ப்புகள் அளிக்க முடியவில்லை.

தனிமையிலிருந்துவிட்டு 4-5 வாரங்கள் (தோனி 20 நாட்கள் என்றார்) இருந்து விட்டு வந்தார் ருதுராஜ். அவரை ஈடுபடுத்தவே விரும்பினோம் ஆனால் தயார் நிலைக்கு மிகவும் தொலைவில் இருந்தார்.

எனவே இப்போது அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோம், அவரும் தன்னை சரியாக வீரர் என்பதை எங்களுக்குக் காட்டினார்.

நாங்கள் நன்றாக ஆடுகிறோம், ஆம் விக்கெட்டுகளை இழந்தோம், ஆனால் ருதுராஜ், ராயுடு கூட்டணி அமைந்தது. அதாவது வெற்றி பெறுதற்குரிய அணி நாங்களே என்று உணர்ந்தோம்.

கலவையான உணர்வுகள் தோன்றுகின்றன, இங்கு உட்கார்ந்திருக்கிறோம் ஆனால் தொடரின் பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியே போய் விட்டோம். அதனால் பதற்றமாக ஆட்டத்தை பார்க்கவில்லை. வெற்றி பெற்றது மகிழ்ச்சியே, இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x