Published : 30 Oct 2020 01:43 PM
Last Updated : 30 Oct 2020 01:43 PM
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியில் சூரிய குமார் யாதவ் 79 ரன்களை விளாசி மும்பையை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
இந்த இன்னிங்சின் 13வது ஓவரில் விராட் கோலி அவரை முறைத்துப் பார்த்து வெகு அருகில் வந்தார். ஸ்லெட்ஜ் செய்ய வந்தது போல் தெரிந்தது, ஆனால் சூரியகுமார் யாதவ் எதிர்முனை பேட்ஸ்மெனை நோக்கிச் சென்று கோலியின் முறைப்பைத் தவிர்த்தார்.
பிறகு வெற்றி பெற்றவுடன் தன் நெஞ்சை தொட்டுக் காட்டி, என்னை நம்பினீர்கள் உங்களுக்காக நான் வென்று கொடுப்பேன்’ என்பது போல் சைகை காட்டினார். இதனையடுத்து சமூகவலைத்தளங்களில் எதிர்வினைகள் கலப்பாக வெளிவந்தன. பெரும்பாலும் சூரியகுமார் யாதவைப் பாராட்டியும், கோலியை கண்டித்தும் எழுந்தன.
இந்திய அணியில் தன்னை தேர்வு செய்வார்கள் என்று 3 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பிரமாதமாக ஆடிவருகிறார் சூரிய குமார் யாதவ் ஆனால் அவரை தேர்வு செய்யாமல் புறக்கணித்தனர்.
இதனையடுத்து தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பொறுமை கடைபிடியுங்கள் சூரியா என்றும் அதையே சச்சினும் கூறினர், சேவாக் கூறும்போது எதற்கும் அஞ்சாத வீரராக இருக்கிறார் சூரியகுமார் என்றார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “He came, He Saw Stared, He conquered" என்றும் மும்பை இந்தியன்ஸ் ஒரே குடும்பம் என்றும் பதிவிட்டுள்ளது. அதாவது, அவர் வந்தார், இவர் முறைத்தார், அவர் வென்றார் என்று மும்பை இந்தியன்ஸ் சூரியகுமார் யாதவ்வையும் விராட் கோலியையும் குறிப்பிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த ஒரு விளையாட்டும் வீரர்களை பல அடுக்கு வித்தியாசங்களிலிருந்து ஒருங்கிணைப்பது, ஒற்றுமையை வளர்ப்பது என்று தொன்மம் ஒன்று பேசப்படும், ஆனால் இப்படி பிரிவினைப்படுத்தினால் நாளை விராட் கோலி கேப்டன்சியில் சூரிய குமார் யாதவ் இந்திய அணியில் தேர்வாகிறார் என்றால் ஒரே ஓய்வறையை எப்படி பகிர்ந்து கொள்ள முடியும்?
எனவே இவர்கள் வணிக, வர்த்தகத் தந்திரங்களுக்கு, பயன்பாடுகளுக்கு இந்திய வீரர்களிடையே பிரிவினை ஏற்படுத்தலாமா என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT