Published : 30 Oct 2020 11:47 AM
Last Updated : 30 Oct 2020 11:47 AM
சிஎஸ்கே நேற்று கொல்கத்தாவை வீழ்த்தி அந்த அணியை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு திணறும் பெரும் சிக்கலான நிலையில் கொண்டு விட்டுள்ளது.
டாஸ் வென்ற தோனி சரியாக கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தார். ஆனால் அணியில் 3 ஸ்பின்னர்கள் கரண் ஷர்மா, சாண்ட்னர், ஜடேஜா. இவர்கள் மூவருக்கு எதிராகவும் இயன் மோர்கன் என்ன செய்தார், நிதிஷ் ராணா, சுனில் நரைன், ஆர்.கே.சிங், தன்னுடைய பேட்டிங் என்று இடது கைகளை அதற்கு எதிராக நிறுத்தினார்.
சிஎஸ்கேவின் 3 பவுலர்களுமே ஒரே மாதிரியான பவுலர்கள்தான். இடது கை வீரர்களுக்கு பந்து உள்ளே வரும் எனவே இடது கை வீரர்களுக்கு இவர்களை அடிப்பது சுலபம்.
மேலும் நிதிஷ் ராணா இந்தியாவின் சிறந்த ஸ்பின்னரான அஸ்வினுக்கு எதிராக ஒரு முறை கூட விக்கெட்டை கொடுக்காமல் 25-28 பந்துகளில் 53 ரன்களை விளாசியவர், அதாவது இடது கை பேட்ஸ்மெனுக்கு ஆஃப் ஸ்பின் பொதுவாக கடினமாக இருக்கும் அப்படியிருக்கும் போதே அஸ்வினை வெளுத்துக் கட்டியிருக்கும் ராணாவுக்கு எதிராக தோனி கேப்டன்சியில் தவறிழைத்தார். ஒருமுறை அல்ல ஒரே இன்னிங்சில் இருமுறை தவறிழைத்தார். ஐபிஎல் கிரிக்கெட்டுக்காகவே தன் ‘உடல் பொருள் ஆவி’ அனைத்தையும் கொடுத்தவராகக் கருதப்படும் அனுபவ கேப்டன் எப்படி இருமுறை தவறு செய்ய முடியும்? ஒவ்வொரு வீரரைப் பற்றியும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டாமா?
வேகப்பந்து வீச்சு நடைமுறையில் இருந்த போது நிதிஷ் ராணா 17 பந்துகளில் 10 ரன்களையே எடுத்திருந்தார். அதற்காக வேகப்பந்து வீச்சு அவர் பலவீனம் அல்ல, அவர் கொஞ்சம் நிதானித்து பிறகு ஸ்பின்னர்களை சாத்தி எடுப்பவர் என்பது ஐபிஎல் ஆடுபவர்கள் மட்டுமல்ல பார்ப்பவர்களுக்கே புரியக் கூடிய விஷயம்.
இப்படியிருக்கையில் பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் நியூசி. இடது கை ஸ்பின்னர் சாண்ட்னரை தோனி கொண்டு வந்தார். சென்னை மைதானமாக இருந்தால் தோனிக்கு தொட்டதெல்லம் துலங்கும், அது அன்னிய மண். என்ன செய்வது? சாண்ட்னர் ஓவரில் பாய்ந்தார் நிதிஷ் ராணா. 2 நான்குகள் ஒரு சிக்ஸ் என்று 15 ரன்களை அடித்த நிதிஷ் ராணா அதன் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. அதுவும் இடது கை ஸ்பின்னர்களை ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பேட்ஸ்மெனின் பேடுக்கு லெக் ஸ்டம்பில் வீசச் சொன்னார் தோனி. இது எப்படி சரியாக இருக்க முடியும்?
ஸ்பின்னுக்கு எதிராக ராணா இந்த சீசனில் 159.8 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். வேகப்பந்துக்கு எதிராக ராணாவின் ஸ்ட்ரைக் ரேட் 124 என்று கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியும் வேகப்பந்து வீச்சுக்கு எதிரானதை விட ஸ்பின் வீச்சுக்கு எதிராக இருமடங்கு கூடுதலாக வைத்திருக்கிறார் நிதிஷ் ராணா. ஸ்பின் பந்து வீச்சில் சாதாரணமாக சிக்ஸ் அடிக்கக் கூடியவர் ராணா.
44 பந்துகளில் அரைசதம் கண்ட ராணா பின்னால் ஒரு அபாய வீரர் என்பது கூடவா தோனிக்குத் தெரியாது?
16வது ஓவரில் தோனி தவறான கணிப்பில் கரண் சர்மா என்ற ஸ்பின்னரைக் கொண்டு வர முதல் மூன்று பந்துகளை 3 சிக்சர்களுக்கு தொடர்ச்சியாகப் பறக்க விட்டார் நிதிஷ் ராணா. கடைசியில் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 61 பந்துகளில் 87 ரன்களை விளாசிய நிதிஷ் ராணா, லுங்கி இங்கிடியின் வேகப்பந்து வீச்சில்தான் ஆட்டமிழந்தார்.
நிதிஷ் ராணாவின் பலத்துக்கு சாதகமாக தோனியின் கேப்டன்சி அமைந்தது ஆச்சரியமாக இருந்தது. தோனியின் இந்தத் தவறு ஆட்டத்தை அவர் இழக்க வாய்ப்பாக அமைந்திருக்கும், கடைசியில் லாக்கி பெர்கூசன், நாகர்கோட்டி படுமோசமாகப் போட்டிருக்காவிட்டால் ஜடேஜா அடித்து வெற்றி பெற்றிருப்பது சாத்தியமில்லாமல் போயிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT