Published : 30 Oct 2020 08:55 AM
Last Updated : 30 Oct 2020 08:55 AM
ஐபிஎல் தொடரிலிருந்து பிளே ஆஃப் தகுதி பெறாமல் வெளியேறினாலும் கொல்கத்தாவின் வாய்ப்புகளுக்கு ஆப்பு வைத்ததில் சிஎஸ்கே அணி நேற்று வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல், ‘நல்ல வேலை’ பார்த்து விட்டது.
நிதிஷ் ராணா(87), ஷுப்மன் கில் (26) நல்ல தொடக்கம் கொடுக்க தினேஷ் கார்த்திக் கடைசியில் 10 பந்துகளில் 21 ரன்கள் என்று ஒரு சிறு அதிரடி இன்னிங்சை ஆட கொல்கத்தா 172/5 என்று ரன் குவித்தது. தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக தன் 2வது அரைசதத்தை எடுத்தார். 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அவர் 72 ரன்கள் எடுத்து கமின்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்படும்போது ரவீந்திர ஜடேஜா புது பினிஷராக உருப்பெற்று 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 11 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க சிஎஸ்கே கடைசி பந்தில் வெற்றிபெற்று 178/4 என்று முடிந்தது.
நிச்சயம் அட்டவணையில் அடியில் இருக்கும் சிஎஸ்கேவிடம் தோற்றதை நினைத்து கொல்கத்தா அணி காலம் முழுதும் மருங்கவே செய்யும்.
இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே கேப்டன் தோனி இப்போது ருதுராஜிடம் ஸ்பார்க் இருப்பதை ஒப்புக் கொள்ளும் விதமாக புகழ்ந்து தள்ளினார்:
வாய்ப்பு அளிக்காத வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்க முடிவெடுத்தோம், அவர்கள் இந்த வாய்ப்பை விட்டு விடாமல் இறுக்கப்பற்றி கொள்ள வேண்டும் என்பதையும் விரும்பினோம்.
ருதுரார் வலைப்பயிற்சியில் ஆடும்போது பார்த்திருக்கிறோம். அதன் பிறகு கரோனாவினால் பாதிக்கப்பட்டார் 20 நாட்கள் கழித்தே திரும்பினார். இது துரதிர்ஷ்டமே, அவர் இந்த சீசனை நிச்சயம் நினைவில் கொள்வார். திறமையுள்ள வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாடும் வலம் வருகிறார்.
அவரிடம் பெரிய கஷ்டம் என்னவெனில் அவர் அதிகம் பேசும் பழக்கமுடையவர் அல்ல. இதனால் ஒரு வீரரை கணிப்பது நிர்வாகத்துக்கு கடினமாக உள்ளது.
ஆனால் இன்னிங்ஸில் அவர் ஆட ஆட அவர் விருப்பத்துக்கு ஷாட்களை எங்கு வேண்டுமானாலும் அடிக்கிறார், அவர் திட்டமிட்டு ஆடுகிறார். முதலில் அவரை நாங்கள் ஆட வைத்த போது மேலேறி வந்து ஆடும் முயற்சியில் ஆட்டமிழந்தார், அது அவருக்கு ஏற்பட்ட சூழ்நிலையில் அழுத்தம் காரணமா அல்லது அவரது இயல்பான ஆட்டமே அப்படியா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பந்தை வைத்து ஒருவரை கணிக்க முடியாது, ஒரு பந்து போதாது.
இந்தத் தொடரில் நாங்கள் சரியாக ஆடவில்லை, ஆனால் தொடரில் நம் முக்கியத்துவத்தை இழந்து விடக்கூடாது என்பதைத்தான் வீரர்களிடம் வேண்டினோம். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தயார் செய்து கொள்ளுங்கள் ஆனால் ஒரு மூன்று மூன்றரை மணி நேரம் களத்தில் சிறப்பாகச் செயல்படுங்கள் என்றோம். தகுதி பெறும் நிலையில் இல்லை, ஆனால் நிறைய நம்பிக்கைகளை எடுத்துச் செல்கிறோம். அதே வேளையில் இளம் திறமையின் பொட்டு வெளிச்சத்தை நமக்கு இந்தத் தொடர் காட்டியுள்ளது., என்றார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT