Published : 29 Oct 2020 05:37 PM
Last Updated : 29 Oct 2020 05:37 PM
ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி அரை சதம் அடித்த சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியத் தொடருக்கு தேர்வு செய்யப்படாதது பெரும் கண்டத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில், சூர்யகுமார் நம்பிக்கையுடன், மன உறுதியுடன் இருக்க வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, சூர்யகுமார் தூணாக இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 43 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் யாதவ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு வந்த சூர்யகுமார் போட்டி முடிவில், “என்னை நம்புங்கள். நான் இருக்கிறேன். ஏன் வெற்றியைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்” என்று அணி வீரர்களைப் பார்த்து, சைகையில் கேட்டு அசரவைத்தார்.
ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி கடந்த இரு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில் சூர்யகுமார் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒரு சர்வதேச பேட்ஸ்மேனாக உருவாவதற்கான அனைத்துத் தகுதிகளும் சூர்யகுமார் யாதவுக்கு இருந்தபோதிலும் தொடர்ந்து பிசிசிஐ ஏன் பாராமுகமாக உள்ளது எனத் தெரியவில்லை.
மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கடந்த 3 ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக விளையாடிக் கொடுத்துள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள், 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 480க்கும் மேற்பட்ட ரன்கள், இந்தத் தொடரல் இதுவரை 350க்கும் மேற்பட்ட ரன்களை சூர்யகுமார் யாதவ் சேர்த்துள்ளார்.
ஆனால், சூர்யகுமார் யாதவை பிசிசிஐ தேர்வுக்குழு ஏன் இந்திய அணிக்குத் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை.
சூர்யகுமாரின் ஆட்டத்தைப் பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சூர்ய நமஸ்காரம். பொறுமையாக இருங்கள், மன உறுதியுடன் இருங்கள் சூர்யகுமார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இத்தனை நாட்களாக இந்திய அணியில் சூர்யகுமாருக்கு வாய்ப்பளிக்காமல் இருக்கக்கூடாது. 3 ஐபிஎல் சீசன்களில் சூர்யகுமார் கலக்கியுள்ளார். அதிலும் இன்றைய ஆர்சிபிக்கு எதிரான சூர்யகுமாரின் பேட்டிங் அற்புதமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பதிவிட்ட கருத்தில், “ என்ன அடி சூர்யகுமார். இந்திய அணிக்கு உங்களை ஏன் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை. உங்களின் அற்புதமான பேட்டிங்கைப் பார்க்கவே விருந்தாக இருந்தது. இதேபோன்ற ஆட்டத்தை இந்திய அணியிலும் விரைவில் ஆடுவீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கியமான வெற்றி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சூர்யகுமார். அமைதியாகவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியும் நமது பாதையை நோக்கிச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஆகச்சிறந்த இன்னிங்ஸ் சூர்யகுமார். உங்களிடம் இருந்து 2-வது முறையாகப் பார்க்கிறேன். சூர்யகுமார் விளையாடியதை தேர்வுக்குழுவினர் பார்த்திருப்பார்கள் என நம்புகிறேன். அருமையாக பேட் செய்தீர்கள் சூர்யகுமார்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT