Last Updated : 27 Oct, 2020 12:27 PM

 

Published : 27 Oct 2020 12:27 PM
Last Updated : 27 Oct 2020 12:27 PM

ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? ரோஹித் உடல் தகுதி குறித்து ஏன் மறைக்கிறீர்கள்?- சுனில் கவாஸ்கர் கேள்வி

ரோஹித் சர்மா : கோப்புப்படம்

துபாய்

ரோஹித் சர்மா உடல்நிலை குறித்து ரசிகர்கள் அறிந்துகொள்ள உரிமை இருக்கிறது. ஏன் மறைக்கிறீர்கள்? என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காயம் காரணமாக ஆஸ்திரேலியத் தொடருக்கும் தேர்வு செய்யாப்படாமல் விடப்பட்ட ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 18-ம் தேதி நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கடைசியாக ரோஹித் சர்மா விளையாடினார். இரு சூப்பர் ஓவர்கள் வரை சென்று மும்பை அணி தோற்றது. அந்தப் போட்டியின் 2-வது சூப்பர் ஓவரின்போது ரோஹித் சர்மாவுக்கு இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

23-ம் தேதி சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் மும்பை அணியின் கேப்டனாக பொலார்ட் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அப்போது இருந்து இதுவரை எந்தவிதமான ஆட்டத்திலும் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. மும்பை அணியின் கேப்டனாக பொலார்ட் செயல்பட்டு வருகிறார்.

ஆனால், காயத்திலிருந்து லேசாக குணமடைந்து நேற்று ரோஹித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அடுத்த 2 மணி நேரத்தில் ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஒருநாள், டி20, டெஸ்ட் என எந்த அணியிலும் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை.

ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம், மற்றும் உடற்தகுதியின்மையால் அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவரின் உடல்நிலையை பிசிசிஐ மருத்துவர் குழுவினர் கண்காணிப்பார்கள் என மட்டும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்தும், உடல் தகுதி குறித்தும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. அடுத்துவரும் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடுவாரா, காயத்தின் தன்மை என்ன, உடல் தகுதி குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது.

ரோஹித் சர்மாவுக்கு 2-வது முறையாக இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதை பிசிசிஐ நிர்வாகம் அறிந்துதான் அவரை ஆஸ்திரேலியத் தொடருக்குத் தேர்வு செய்யவில்லை. நியூஸிலாந்து தொடரின்போது இதேபோன்று காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு பாதியிலேயே ரோஹித் சர்மா நாடு திரும்பினார். ஆதலால், முன்னெச்சரிக்கையாகவே ரோஹித் சர்மாவை அணி நிர்வாகம் தவிர்த்துவிட்டது.

இந்தச் சூழலில் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் எப்போது சரியாகும், என்ன விதமான காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஏன் வெளிப்படையாகத் தெரிவிக்க மறுக்கிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

“இன்னும் சில வாரங்களில் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ரோஹித் சர்மாவுக்கு என்னதான் உடல் பிரச்சினை எனத் தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் வலைப்பயிற்சியில் ஈடுபடுகிறார் என்றால், என்ன மாதிரியான காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவில்லை.

ரோஹித் சர்மாவுக்கு உடல்நிலையில் என்ன இருக்கிறது என்பது குறித்த சிறிய அளவு வெளிப்டைத்தன்மை, வெளிப்படையான பேச்சு ஆகியவை அனைவருக்கும் உதவும். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ளத் தகுதியானவர்கள்.

ஆனால், மும்பை அணி நிர்வாகம் அதுபற்றித் தெரிவிக்க மறுக்கிறது. எதிரணியினருக்கு எந்தவிதமான உளவியல்ரீதியான சாதகமான போக்கையும் கொடுக்க மும்பை அணி நிர்வாகம் விரும்பவில்லை.

ரோஹித் சர்மாவின் உடல்நிலை தொடர்பாகவும், மயங்க் அகர்வால் உடல்நிலை தொடர்பாகவும் கிரிக்கெட் ரசிகன் எனும் முறையில் எனக்கும் கூட தெரிந்துகொள்ள அதிகமான ஆர்வம் இருக்கிறது''.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியத் தொடரில் ரோஹித் சர்மா இடம்பெறாவிட்டாலும், ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடலாம் என்று கூறப்பட்டாலும் இதுவரை அதிகாரபூர்வமான செய்தி ஏதும் வரவில்லை. ஒருவேளை ரோஹித் சர்மா மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாமல் போனால், அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x