Last Updated : 27 Oct, 2020 08:39 AM

 

Published : 27 Oct 2020 08:39 AM
Last Updated : 27 Oct 2020 08:39 AM

ஆஸி.தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் சர்மா தொடரிலேயே இல்லை; கே.எல்.ராகுலுக்குப் பதவி: தமிழக வீரருக்கு வாய்ப்பு

ரோஹித் சர்மா : கோப்புப்படம்

புதுடெல்லி

ஆஸ்திரேலேயாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

இதில் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் ஒருநாள், டி20 அணிக்கு துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்குப் பின் டெஸ்ட் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட கே.எல்.ராகுல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி 2020 நவம்பர் முதல் 2021 ஜனவரி வரை 3 மாத காலம் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 27 முதல் 2021 ஜனவரி 19-ம் தேதிவரை இந்திய அணி ஆஸி.யில் பயணம் மேற்கொள்கிறது.

இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழு நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''ரோஹித் சர்மா, இசாந்த் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இருவருமே ஆஸ்திரேலியத் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இருவரின் காயத்தையும் பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணிக்கும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்திய அணியில் இடம் பெறாத ஹர்திக் பாண்டியா டி20, ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வருண் சக்ரவர்த்தி

கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், கரோனா காரணமாக அந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இந்திய டி20 அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷப் பந்த், ஒருநாள், டி20 அணிகளுக்குத் தேர்வு செய்யப்படவில்லை. விருதிமான் சாஹா, ரிஷப் பந்த் இரு விக்கெட் கீப்பர்கள் டெஸ்ட் அணியில் உள்ளனர்.

ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சிறப்பாகப் பந்துவீசி வருவதால், டெஸ்ட் அணிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த நியூஸிலாந்து தொடருக்குப் பின் டெஸ்ட் அணியில் இடம் பெறாத குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்.

இதுதவிர கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் போரல், டி.நடராஜன் ஆகியோர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு மாற்று வீரர்களாகப் பயணிக்கின்றனர்.

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு, மருத்துவர்கள் குழு, ஊழியர்கள் அனைவரும் துபாய் சென்றுள்னர். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணியில் உள்ள அனைவரும் துபாயிலிருந்து சிட்னிக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்''.

இவ்வாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டெஸ்ட் அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்மான் சாஹா, ரிஷப் பந்த், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் ஷைனி, குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகமது சிராஜ்.

ஒருநாள் அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ரவிந்திர ஜடேஜா, யஜூவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, சர்துல் தாக்கூர்.

டி20 அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்ஸன், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யஜூவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x