Published : 26 Oct 2020 11:17 AM
Last Updated : 26 Oct 2020 11:17 AM
புள்ளிப்பட்டியலில் நாம் மேலே உயர்கிறோமா என்பது முக்கியமல்ல. நாம் கிரிக்கெட்டை உளப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். இல்லாவிட்டால் கிரிக்கெட் வலியாக, வேதனையாக மாறிவிடும் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்தார்.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வென்றது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது. 146 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 65 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி 12 போட்டிகளில் 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளுடன் கடைசியில் இருக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் வென்றாலும் சிஎஸ்கே அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது.
இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது
“மிகச்சிறந்த போட்டியாக அமைந்திருக்கிறது என்று நான் உணர்கிறேன். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தது. திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம். மெதுவான இந்த ஆடுகளத்தில் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி, அவர்களைக் குறைவான ஸ்கோருக்குள் சுருட்டினோம். எங்கள் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தார்கள்.
எங்கள் அணியில் பேட்டிங் நிலைத்தன்மை உடையதாக கடந்த பல போட்டிகளாக இல்லை. ஆனால், இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக பேட்டிங் செய்தார். தன்னைத் தக்கவைத்துக் கொண்டு எந்தப் பந்துகளை பவுண்டரி அடிக்க வேண்டும், சிக்ஸர் அடிக்கவேண்டும் என்று தேர்வு செய்து அடித்தார்.
நீங்கள் சரியாக விளையாடும் நிலையில் உங்களின் உணர்ச்சிகள் மேலோங்கி இருக்கும். ஆதலால், இந்தப் போட்டியோடு தங்கள் நம்பிக்கையை இளம் வீரர்கள் விட்டுவிடக்கூடாது. கடந்த 12 மணி நேர வலியான நேரத்தை மறந்துவிட்டு, மற்ற போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
புள்ளிப்பட்டியலில் நாம் மேலே செல்கிறோமா என்பது முக்கியமல்ல. நாம் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். இல்லாவிட்டால், கிரிக்கெட் வலி நிரம்பியதாக, கொடூரமாக மாறிவிடும். இளைஞர்கள் விளையாடியதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது’’.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT