Published : 25 Oct 2020 05:23 PM
Last Updated : 25 Oct 2020 05:23 PM
கடந்த 2006-ம் ஆண்டு எனக்கு ஏற்பட்ட நிலைதான் டெல்லி கேபிடல்ஸ் அணியில் பிரித்வி ஷாவுக்கு ஏற்பட்டுள்ளது. பரவாயில்லை சில போட்டிகள் பெஞ்சில் அமரட்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்கராரும் இளம் வீரருமான பிரித்விஷா கடந்த சில இன்னிங்ஸ்களாக மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
கடந்த 6 இன்னிங்களில் 5 டக்அவுட், ஒரு போட்டியில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்து ஃபார்மில் இல்லாமல் இருந்த பிரித்வி ஷா நேற்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமரவைக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அஜின்கயே ரஹானே சேர்க்கப்பட்டார்.
பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத பிரித்விஷாவுக்கு கடுமையான தண்டனை அளி்க்கும் வகையில் பயிற்சியாளர் பாண்டிங் அவரை வெளியில் அமரவைத்து, அவருக்கு பதிலாக ரகானேவை சேர்த்தார்.
பிரித்விஷாவை வெளியே அமர வைத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எடுத்த முடிவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் வரவேற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட நிலையையும், பிரித்விஷாவுக்கு ஏற்பட்ட நிலையையும் ஒப்பிட்டு சேவாக் பேட்டி அளித்துள்ளார்.
வீரேந்திர சேவாக் இணையதளம் ஒன்றுக்கு அளித்தபேட்டியில் கூறுகையில் “ டெல்லி அணி வீரர் பிரித்வி ஷா பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத நிலையில் அவரை வெளியே அமர வைத்து பயிற்சியாளர் பாண்டிங் எடுத்த முடிவு சரியானதுதான்.
கடந்த சில போட்டிகளாக பிரித்விஷா மோசமான ஃபார்மில் இருந்ததன் விளைவாக அவரை வெளியே அமர வைத்தது சரியானதுதான். இன்னும் சில போட்டிகளுக்கு அவரை அமர வைக்கலாம் தவறவில்லை. பிரித்வி ஷாவுக்கு இப்போது சிறிய இடைவெளி தேவை.
சில நேரங்களில் பேட்ஸ்ேமனுக்கு ஒருவிதமான அகங்காரமான மனநிலை உருவாகிவிடும். நாம் எப்படி விளையாடினாலும் அணியில் இருப்போம், நமக்கு ஏற்றார்போல் விளையாடலாம், யார் நம்மை கேள்வி கேட்பது என்ற மனநிலை உருவாகும். அந்த நேரத்தில் நாம் ஒரு சிறிய இடைவெளி எடுப்பது நல்லது. அவ்வாறு ஒவ்வொரு பேட்ஸ்மேனும் இடைவெளி எடுப்பது ஒவ்வொருவரும் சிறப்பாகச் செயல்பட உதவும்
நான் என் வாழ்வில் ஏற்பட்ட அனுபவத்த இங்கு பகிர்கிறேன். எனக்கும் பிரித்விஷாவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்பட்டது. கடந்த 2006ம் ஆண்டில் இந்திய அணியில் இருந்தபோது நான் மோசமாக பேட் செய்தேன், ரன்களை அடிக்கவே முடியவில்லை. ஆனால் இருப்பினும் ராகுல் திராவிட், கங்குலி எனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து, விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தொடர வைத்தனர்.
எனக்கு வேறு வழி தெரியாமல் அவர்களிடமே சென்று என்னால் ரன் அடிக்க முடியவில்லை. சரியாக விளையாட முடியிவில்லை. எனக்கு சிறிய இடைவெளி தேவை ஆதலால், என்னை ஒரு தொடருக்குத் தேர்வு செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் எனக்கு ஒரு தொடர் ஓய்வு அளித்தார்கள். ஆனால், அந்த ஓய்வு தான் என்னை கேப்டனாக உயர்த்தியது.
ஆதலால் ஒரு வீரரின் மனநிலை, எவ்வாறு நினைக்கிறார் என்பது முக்கியமானது. நீங்கள் குழப்பமான மனநிலையில் இருந்தால், உங்களால் ரன் அடிக்க முடியாது. உங்களால் விளையாடுவதற்கான சூழலே அமையாது.
அந்த நேரத்தில் நாமே ஓய்வு எடுத்துக்கொண்டு சிறிது காலத்துக்குப்பின் விளையாடுவது நல்லது. அந்த ஓய்வு நேரத்தில் எவ்வாறு பேட்டிங்கை மேம்படுத்துவது, எதிரணிகளுக்கு எதிராக எவ்வாறு செயல்படுவது குறித்து சிந்திக்கலாம். ஆதலால் சிறிய இடைவெளி எப்போதும் உதவும்.
பிரித்விஷாவை அமரவைத்து பாண்டிங் எடுத்த முடிவு சரியானது
இவ்வாறு ேசவாக் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT