Published : 25 Oct 2020 01:16 PM
Last Updated : 25 Oct 2020 01:16 PM
நாங்கள் வெற்றி பெறுவதை பழக்கமாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறோம். மகிழ்ச்சியில் எனக்கு பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை என்று கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. தொடர்ந்து 4-வது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. இதன் மூலம் புள்ளிப்பட்டியலிலும் 5-வது இடத்துக்கு பஞ்சாப் அணி முன்னேறியுள்ளது.
முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்இழப்புக்கு 12 6ரன்கள் சேர்த்தது. 127 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.
126 ரன்கள் எனும் குறைவான இலக்கை வைத்துக்கொண்டு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கடைசிவரை போராடியதையும், வீரர்கள் விடாமுயற்சியுடன் நம்பிக்கையுடன் செயல்பட்டதையும் பாராட்ட வேண்டும். கடைசி 3 ஓவர்களில்தான் ஆட்டத்தின் போக்கே மாறியது. கடைசி 14 ரன்களைச் சேர்ப்பதற்குள் சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
இந்த வெற்றிக்குப்பின் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதையே பழக்கமாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறோம். முதல்பாதியில் நாங்கள் இந்த வெற்றி பெறும் பழக்கத்தை தொடரவில்லை. ஆனால், இந்த நேரத்தில் மகிழ்ச்சியில் என்னால் பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை, இதை நான் நேர்மையாகச் சொல்கிறேன்.
ஏனென்றால், நான் அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறேன். எங்கள் அணி வீரர்கள் சிறந்த பங்களிப்பை, திறமையை வெளிப்படுத்தியதை நினைத்து பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
எங்களின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் திரைமறைவில் இருக்கும் எங்கள் அணியின் சக ஊழியர்கள்தான். குறிப்பாக 2 மாதங்களில் வீரர்களின் திறமையில், பயிற்சியில், மனநிலையில் பெரிதாக மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியாது. ஆனால், தலைமைப் பயிற்சியாளர் கும்ப்ளே, ஆன்டி, சார்ல், ஜான்டி ரோட்ஸ், வாசிம் ஜாபர் என அனைவரும் எங்களுக்கு தீவிரமான பயிற்சி அளித்து மனதளவில் உருவேற்றியுள்ளனர்.
நானும், மன்தீப் சிங்கும் களமிறங்கி முதல் ஓவரைச் சந்தித்தபோதே இது ஆடுகளத்தில் அதிகமான ரன்களைச் சேர்க்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்டோம். 160 ரன்களையாவது சேர்த்துவிட வேண்டும் என்று எண்ணினோம். முதல் 6 ஓவர்கள் சன்சைர்ஸ் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டோம்.ஆனால், பவர்ப்ளேயில் அதிகமான ரன்களை விடக்கூடாது என்பதால் இரு லெக் ஸ்பின்னர்களை கொண்டுவர முடிவு செய்தோம். இதுபோன்ற சூழலில் பந்துவீச்சாளர்களுக்கு என்ன தேவை என்பதை அமர்ந்து யோசித்தோம், அதற்கு ஏற்றார்போல் செயல்பட்டோம்
இவ்வாறு கே.எல்.ராகுல் தெரிவித்தார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் “ இந்தத் தோல்வி என்னையும், அணியினரையும் வெகுவாகப் பாதித்துள்ளது. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் மிக அருமையாகப் பந்துவீசினார்கள், பஞ்சாப் பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தினார்கள். நான் நன்றாகத்தான் தொடங்கினோம் ஆனால், அதன்பின் தவறவிட்டுவிட்டோம். ஆடுகளம் நேரம் செல்லச் செல்ல மிகவும் கடினமாகிவிட்டதால், ரன்சேர்்க்க முடியவில்லை.
எங்களைப் பொருத்தவரை எதிரணியினருக்கு அழுத்தத்தை கொடுக்க முயற்சித்து முன்னோக்கி செல்ல முயன்றோம், ஆனால், அவர்களின் ஸ்விங் பந்துவீச்சு, சுழற்பந்துவீ்ச்சைக் கடந்து செல்ல முடியவில்லை. எங்கள் பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு நெருக்கடி கொடுத்து ரன் சேர்க்கவிடாமல் கட்டுப்படுத்தினர். பந்துவீச்சாளர்கள் திட்டத்தை சரியாகச் செயல்படுத்தினார்கள். இந்தப் போட்டியின் தோல்வியை மறந்துவிட்டு, அடுத்தப் போட்டிக்காக நகர வேண்டும் “ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT