Published : 25 Oct 2020 09:06 AM
Last Updated : 25 Oct 2020 09:06 AM
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மன்தீப் சிங் தனது தந்தை உயிரிழந்த செய்தி அறிந்தும் இறுதிச் சடங்கிற்கு செல்லாமல் நேற்றுப் போட்டியில் பங்கேற்று விளையாடினார்.
மன்தீப் சிங்கின் தந்தை உயிரிழந்ததற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பஞ்சாப் அணியின் அனைத்து வீரர்களும் கையில் கறுப்புப் பட்டை அணிந்து நேற்று விளையாடினர்.
உடல்நலம் இல்லாமல் இருந்த மன்தீப்சிங்கின் தந்தை ஹர்தேவ் ஜலந்தர் நகரில் நேற்றுமுன்தினம் இரவு காலமானார். இந்த செய்தியை மன்தீப்சிங்கின் சகோதரர் பஞ்சாப் அணி நிர்வாகத்துக்குத் தெரிவித்தார்.
ஆனால் ஐபிஎல் தொடரில் உயிர்-குமிழி சூழலில் இருப்பதால், தந்தையின் இறுதிச்சடங்கிற்கு செல்ல முடியாத சூழல் மன்தீப் சிங்கிற்கு ஏற்பட்டது. இதனால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, நேற்று போட்டியில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால், துரதிருஷ்டமாக மன்திப் சிங் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மன்தீப் களத்துக்குள் வந்தபின் இந்த செய்தியை அறிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர். குறிப்பாக ரஷித் கான் சிறிது நேரம் நின்று பேசி தோளில் தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.
ஏனென்றால் இதேபோன்ற சூழலை ரஷித்கானும் அனுபவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிக் பாஷ் லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக ரஷித்கான் ஆடியபோது அவரின் தந்தை காலமானார்.ஆனால், அந்த செய்தி கேட்டும், ரஷித்கான் தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தான் செல்லாமல் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல கொல்கத்தா அணி வீரர் நிதிஷ் ராணாவின் மாமனார் நேற்று காலமானார். அவரும் மாமனார் இறுதிச்சடங்கிற்கு செல்ல முடியாமல் நேற்றுவிளையாடினார். சிறப்பாக ஆடிய ராணா அரைசதம் அடித்து அந்த அதை தனது மாமனாருக்கு அர்ப்பணித்தார்.
மன்தீப் சிங் தந்தை உயிரிழந்த செய்தி அறிந்த சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். அதில் “ அன்புக்குரியவர்களை இழத்தல் வேதனையானது.ஆனால், அதில் அதிகமான வலியைதரவல்லது எதுவென்றால், நம் அன்புக்குரியவர்கள் மண்ணைவிட்டுச் செல்லும் போது கடைசியாக ஒருமுறை சென்று வழியனுப்ப முடியாமல் போவதே வலிமிகுந்தது.
மன்தீப்சிங், ராணா ஆகியோருக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த சோகத்திலிருந்து அவர்களின் குடும்பத்தினர் மீண்டு வர வேண்டும். சிறப்பாக விளையாடிய இருவருக்கும் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT