Published : 24 Oct 2020 02:07 PM
Last Updated : 24 Oct 2020 02:07 PM
கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் இப்போது விராட் கோலிதான் ஒரு முழு நிறைவான வீரராக இருக்கிறார் என்று இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
ஒருநாள், டி20களில் இலக்குகளை விரட்டும் அவரது திறன் அலாதியானது என்று விராட் கோலிக்கு ஜோ ரூட் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் இப்போதைக்கு வெள்ளைப்பந்தில் ஜோஸ் பட்லர்தான் முழு நிறைவான பேட்ஸ்மென் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
ஈஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்துக்காக ஜோ ரூட் கூறியதாவது:
விராட் கோலிதான் இப்போதைக்கு அனைத்து வடிவங்களிலும் முழு நிறைவு எய்திய வீரராகத் திகழ்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னிங்ஸை அழகாகக் கட்டமைத்து அவர் இலக்குகளை வெற்றிகரமாக விரட்டுவது அலாதியானது. அதுவும் கடைசி வரை நாட் அவுட்டாக இருப்பது அசாதாரணமானது.
அவரிடம் பன்முகத்திறமை உள்ளது அவர் வேகப்பந்துக்கோ, ஸ்பின்னுக்கோ பலவீனமானவர் என்று கூற முடியாது.
இங்கிலாந்தில் முதல் தொடரில் அவர் திணறியது என்னவோ உண்மைதான், ஆனால் அடுத்த முறை வந்த போது ரன்களைக்குவித்தார்.
அதே போல் மற்ற வெளிநாடுகளிலும் அவரது ஆட்டம் மிகப்பெரியது. இத்துடன் கேப்டன் பொறுப்பையும் தன் தோள்களில் சுமக்கிறார்.
கோலி, வில்லியம்சன், ஸ்மித்துடன் என்னை ஒப்பிட்டு அளவிட நான் முயற்சி மேற்கொள்வதில்லை. ஆனால் இவர்கள் எப்படி பலதரப்பட்ட இன்னிங்ஸ்களைக் கட்டமைக்கிறார்கள் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்.
கிரிக்கெட்டின் மிகப்பெரிய 3 வீரர்களை நாம் இப்போது ஆடப்பார்த்து வருகிறோம் இவர்கள் ஆட்டத்தைப் பார்ப்பது, கற்றுக்கொள்வது என்பது பெரிய விஷயம். அவர்களுடன் என்னை ஒப்பிட நான் விரும்பவில்லை. அவர்கள் அட்டகாசம், என்றார் ஜோ ரூட்.
அதே போல் அவர் கேன் வில்லியம்சனின் சரியான பேட்டிங் உத்தியையும் பாராட்டியதோடு, ஸ்டீவ் ஸ்மித் பற்றி, “பார்ப்பதற்கு அட்டகாசமான ஆட்டம் உடையவர் ஸ்டீவ் ஸ்மித், அவர் ஆடுவதைப் பார்க்க காசு கொடுக்க வேண்டும். அருமையான ரன் ஸ்கோரர், ஆட்டத்தைப் பற்றி அவர் சிந்திப்பதும் ஆட்டத்தின் நகரும் கணங்கலை அவர் கட்டமைப்பதும் தனித்துவமானது” என்றார் ஜோ ரூட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT