Published : 20 Oct 2020 03:49 PM
Last Updated : 20 Oct 2020 03:49 PM
எம்.எஸ்.தோனி என்ற லெஜண்டின் 200வது ஐபிஎல் போட்டி அவருக்கு துர்சொப்பனமாக அமைந்தாலும் சாதனை மன்னனுக்கு இன்னொரு சாதனையாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 200 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் ஆனார் தோனி.
நேற்றைய போட்டியில் தீபக் சாஹர் அருமையாக வீச மூன்று விக்கெட்டுகளை ராஜஸ்தான் இழந்து சற்றே தடுமாறியது, ஆனால் ஜோஸ் பட்லர் இறங்கி, ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்தார், ஸ்மித் ஒரு முனையில் விக்கெட் விழாமல் தடுக்க, நிதானமாகத் தொடங்கிய பட்லர் பிறகு அருமையாக ஆடினார்.
ஸ்டீவ் ஸ்மித் நேற்று 24வது பந்தில்தான் தன் முதல் பவுண்டரியை அடிக்க முடிந்தது. ஆனால் 8வது பந்திலேயே ஜடேஜாவை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி முதல் பவுண்டரியை விளாசினார் ஜோஸ் பட்லர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இல்லாத தீவிரத்தையும் பவரையும் பட்லர் காட்டினார். ஷர்துல் தாக்கூர்,பியூஷ் சாவ்லாவை நன்றாகக் கவனித்தார். இவர்களது 27 பந்துகளில் அவர் 48 ரன்களை விளாசியதாக கிரிக் இன்போ புள்ளி விவரம் கூறுகிறது.
ஸ்மித் பிற்பாடு பட்லரின் இன்னிங்ஸைக் கூறும்போது, “உண்மையில் அதிரடி மனோபாவத்துடன் இறங்கினார். ஆட்டத்தை பறித்துக் கொண்டு போனார். ஏபி டிவில்லியர்ஸ், கிரன் பொலார்ட், ஹர்திக் பாண்டியா போல் பட்லரை நிறுத்த முடியவில்லை” என்றார்.
பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை அடித்து ஆட்ட நாயகன் ஆனார். ஆனால் ஆட்ட நாயகன் பரிசை விடவும் அவருக்குக் கிடைத்த அரும்பெரும் பரிசு சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனியின் அந்த புகழ்பெற்ற 7ம் எண் ஜெர்ஸி. ஆம்! அதை சிறப்புப் பரிசாகத் தோனியிடமிருந்து பெற்றார் பட்லர். 200வது ஐபிஎல் ஆட்டத்தில் ஆடிய உண்மையான லெஜண்டின் மதிப்பு மிக்க 7ம் எண் ஜெர்ஸியை பரிசாகப் பெற்றது ஜோஸ் பட்லரின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான தருணமாக அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT