Published : 20 Oct 2020 08:41 AM
Last Updated : 20 Oct 2020 08:41 AM
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்றதன் மூலம் ஐபிஎல் 2020-லிருந்து சிஎஸ்கே பார்சல் செய்யப்பட்டு விட்டதாகவே கருதப்பட வேண்டியிருக்கிறது. தோனியும் தாங்கள் இந்த சீசனில் ‘அந்த இடத்தில் இல்லை’ என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுவரை 10 போட்டிகளில் 7 தோல்வி, வெறும் 6 புள்ளிகள் மட்டுமே சிஎஸ்கே எடுத்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி குறித்து சென்னை கேப்டன் தோனி ‘இந்த சீசனில் நாங்கள் அந்த இடத்தில் இல்லை’ என்று தோல்வியினால் பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறும் நிலையை ஏற்றுக் கொண்டது போல் பேசினார். ஜெகதீசன் ஒரு போட்டியில் ஆடினார் நன்றாகவே ஆடியதாக அனைவரும் கூறி வரும் நிலையில் இளம் வீரர்க்ளிடத்திலும் பெரிய ‘ஸ்பார்க்’ ஒன்றும் இல்லை என்று கூறுகிறார் தோனி. வாய்ப்பு கொடுத்து சோதித்தால்தானே ஸ்பார்க் தெரியும்? வாய்ப்பே கொடுக்காமல் இவர் இளைஞர்களின் உடலில் புகுந்து பார்த்தது போல் ‘ஸ்பார்க்’ இல்லை என்று கூறுகிறார்.
மேலும் இளம் வீரர்களிடத்தில் தீப்பொறி எதையும் பார்க்கவில்லை என்று மூத்தோருக்கே எந்த ஒரு பொறி மட்டுமல்ல எதுவுமே இல்லாத போது இளம் வீரர்களிடம் தீப்பொறி இல்லை என்று தோனி கூறுவது சர்ச்சைக்குரியதாகும்.
இந்நிலையில் தோல்விக்குப் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அவர் கூறியதாவது
‘இளம் வீரர்களிடம் பெரிய தீப்பொறியைப் பார்க்கவில்லை’
இளம் வீரர்களிடம் நாங்கள் எந்த ஒரு ‘தீப்பொறி’யையும் காணவில்லை. அதாவது அணியில் மாற்றத்தைக் கொண்டு வரும் தீப்பொறி எதுவும் தென்படவில்லை என்று அணி நிர்வாகம் கருதியிருக்கலாம்.
சில விஷயங்களை முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் நாங்கள் அடிக்கடி அணியை மாற்றுவது வீரர்களை வெளியேற்றுவது உள்ளே கொண்டு வருவது என்பதை நாங்கள் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் நாம் எது குறித்தும் நிச்சயத்தன்மையில் இல்லை.
எனவே இருக்கும் வீரர்களுக்கு நியாயமான வாய்ப்புகள் அளித்து சரியாக ஆடவில்லை எனில் வேறு வீரர்களை தேர்வு செய்யலாம். ஓய்வறையில் வீரர்கள் அணியில் தங்கள் இடம் பற்றிய பாதுகாப்பின்மை உணர்வுடன் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.
இந்த சீசனில் நாங்கள் அந்த இடத்தில் இல்லை. இளம் வீரர்களுக்கு சில வாய்ப்புகள் இருந்தது. இளைஞர்களிடம் தீப்பொறி எதையும் நாங்கள் பார்க்கவில்லை, அதனால்தான், ‘ஓகே அனுபவ வீரர்களை வெளியேற்றி இளைஞர்களை உட்புகுத்துவோம்’ என்று எங்களால் சொல்ல முடியவில்லை.
இந்தத் தோல்வி மீதமுள்ள போட்டிகளில் வாய்ப்பளிக்காத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அவர்கள் மீது எந்த ஒரு அழுத்தமும் இருக்காது. அவர்கள் களத்தில் இறங்கி சுதந்திரமாகத் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.
பேட்டிங் வரிசையில் அவர்களுக்கான வாய்ப்பு எங்கு உள்ளது, எங்கு அவர்களை இறக்க முடியும் என்ற வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளது.
ஆட்டம் குறித்து...
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவி இருந்தது. ஜடேஜாவைக் கொண்டு வந்த காரணம் பந்து எந்த அளவுக்கு நின்று வருகிறது என்பதைப் பார்க்கத்தான். முதல் இன்னிங்ஸில் இருந்தது போல் ஸ்பின் பந்துகள் இல்லை. அதனால்தான் வேகப்பந்து வீச்சாளர்களை வீசச் செய்தேன்.
முடிவு என்பது வழிமுறைகளின் விளைவு, வழிமுறைகளில் தவறு இருக்கிறது. வழிமுறைகளில் கவனம் செலுத்தினால் முடிவு குறித்த நெருக்கடி ஓய்வறையில் வர வாய்ப்பில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT