Published : 18 Oct 2020 09:35 AM
Last Updated : 18 Oct 2020 09:35 AM
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் பிராவோ பந்து வீசமுடியாததற்கான காரணத்தையும், அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் விளக்கியுள்ளார்.
கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17ரன்கள் தேவை. வழக்கமாக டெத் ஓவரை பிராவோதான் வீசுவார். ஆனால், திடீரென ஜடேஜா வீசியது வியப்பாக இருந்தது. அனுபவமான ஜடேஜாவின் ஓவரில் அக்ஸர் படேல், 3 சிக்ஸர்களை விளாசி வெற்றியுடன் ஆட்டத்தை முடித்தார்.
பிராவோவுக்கு இன்னும் ஒரு ஓவர் மிச்சம் இருந்த நிலையில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:
துரதிருஷ்டமாக பிராவோவுக்கு வலது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பால் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வறைக்குச் சென்றதால்தான் கடைசி ஓவரில் அவரால் பந்துவீசமுடியவில்லை.பிராவோ இயல்பாகவே டெத் ஓவர் ஸ்பெஷலி்ஸ்ட், பல போட்டிகளில் கடைசி ஓவரில் பந்துவீசி அவர் சவால்களை வென்றுள்ளார்.
ஜடேஜாவை கடைசி ஓவரை வீச வைக்க வேண்டும் என்ற சிந்தனையில்லை. ஆனால், பிராவோவுக்கு காயம் ஏற்பட்டு அவர் பந்துவீச முடியாத காரணத்தால்தான் வேறு வழிதெரியாமல் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்றபடி எங்களின் ஆட்டம், செயல்பாடு சிறப்பாகவே இருந்தது.
பிராவோவுக்கு ஏற்பட்ட காயத்தால்தான் அவரால் பீல்டிங் செய்யவும் முடியவில்லை, கடைசி ஓவரையும் வீச முடியவில்லை. இது பிராவோவுக்கே சற்று வேதனையாகத்தான் இருந்தது. தன்னால் கடைசி ஓவரை பந்துவீசமுடியவி்ல்லை என்று வருத்தப்பட்டார்.
அணிக்காக பல நேரங்களில் ஏராளமாக பிராவோ செய்துள்ளார். பிராவோவுக்கு ஏற்பட்ட காயம் சில நாட்களில் சரியாகலாம் அல்லது 2 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டியது வரலாம். எதுவாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலை தெரியும்” எனத் தெரிவித்தார்.
கரீபியன் லீக் தொடரிலும் காயத்தால் பிராவோவால் பல போட்டிகளில் விளையாட முடியவில்லை. கரீபியன் லீக்கில் டிரிபாகோ நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளங்கிய பிராவோ இறுதிப்போட்டியில் பந்துவீசவும், பேட்டிங் செய்யவும் முடியாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
காயம் காரணமாகவே சிஎஸ்கே அணியின் முதல் 3 போட்டிகளில் பிராவோ பங்கேற்கவில்லை. இதனால் லுங்கி இங்கிடி, ஹேசல்வுட் பயன்படுத்தப்பட்டாலும் அது ஒத்துவரவில்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து பிராவோ அணியில் இடம்பெற்று வருகிறார்.
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டான பிராவோ கடைசி ஓவரில் யார்கர், நக்குல் பால், வைட் யார்கர் என விதவிதமாக பந்துவீசி எதிரணி வீரர்களை திணறிடிக்கும் திறமை கொண்டவர். 6 போட்டிகளில் இதுவரை பிராவோ 19 யார்கர்களை வீசியுள்ளார். பும்ரா 19 யார்கர்களையும், நடராஜன் 40 யார்கர்களையும் வீசியுள்ளனர்.
பிராவோவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சிஎஸ்கே அணிக்கு அடுத்த பெரும் பின்னடைவாகும். ஏற்கெனவே தனிப்பட்ட காரணங்களால் ரெய்னா, ஹர்பஜன் இருவரும் போட்டியிலிருந்து விலகிவிட்டநிலையில் பிராவோவும் விளையாமல் போனால் பெரும் பின்னடைவாகும். இதனால் இம்ரான் தாஹிர், மிட்ஷெல் சான்ட்னர் இருவரில் ஒருவரை அடுத்தப்போட்டியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT