Last Updated : 17 Oct, 2020 08:57 PM

 

Published : 17 Oct 2020 08:57 PM
Last Updated : 17 Oct 2020 08:57 PM

'தனி ஒருவன்'; ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய டிவில்லியர்ஸ்; 'வள்ளல்' உனத்கத்: ஆர்சிபியிடம் வெற்றியைத் தாரை வார்த்தது ராஜஸ்தான்

ஆர்சிபியின் வெற்றியைச் சாத்தியமாக்கிய ஏ.பி.டிவில்லியர்ஸ் : படம் உதவி | ட்விட்டர்.

துபாய் 

ஏபி டிவில்லியர்ஸின் மிரளவைக்கும் அதிரடி ஆட்டத்தால் துபாயில் இன்று நடந்த ஐபிஎல் டி2்0 போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 9 ஆட்டங்களில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெல்வது சாத்தியமே இல்லை என்று முடிவு எடுத்த நிலையில், அதைச் சாத்தியமாக்கிக் காட்டிய பெருமை டிவில்லியர்ஸைத்தான் சேரும்.

ஆட்ட நாயகன்

டிவில்லியர்ஸ் 22 பந்துகளில் 55 ரன்கள் (6 சிக்ஸர் ஒரு பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அணியின் வெற்றியைச் சாத்தியமாக்கிய டிவில்லியர்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆட்டத்தை மாற்றிய ஏபிடி

18-வது ஓவர்கள் வரை ஆட்டம் ராஜஸ்தான் அணியின் வசமே இருந்தது. ராஜஸ்தான் அணிதான் வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர். கடைசி இரு ஓவர்களில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது.

உனத்கத் 19-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில்தான் ஒட்டுமொத்த ஆட்டமும் ஆர்சிபி பக்கம் திரும்பியது.

ஸ்ட்ரைக்கில் இருந்த டிவில்லியர்ஸ் , 'மிட் விக்கெட்', 'லாங்ஆன்', 'ஸ்கொயர் லெக்' என உனத்கத் வீசிய பந்தில் 'ஹாட்ரிக் சிக்ஸர்களை' விளாசினார். கடைசிப் பந்தில் குர்கீரத் சிங் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் கிடைத்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆர்ச்சர் பந்துவீசினார். முதல் பந்தில் குர்கீரத் 2 ரன்கள், 2-வது பந்தில் ஒரு ரன், 3-வது பந்தில் டிவில்லியர்ஸ் 2 ரன்கள், 4-வதுபந்தில் டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார் டிவில்லியர்ஸ்.

மோசமான கேப்டன்ஷிப்

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை இதுபோன்ற மோசமான கேப்டன்ஷிப்பை எந்த அணியிலும் பார்த்திருக்க முடியாது. கையில் கிடைத்த வெற்றியை ஸ்மித்தும், உனத்கத்தும் சேர்ந்து நழுவிட்டார்கள் என்றுதான் சொல்ல முடியும். உனத்கத்துக்கு பந்தை ஸ்விங் செய்வதிலும் சிக்கல், நக்குல் பந்துவீசுவதிலும், யார்க்கர் வீசுவதிலும் மிகவும் மோசமாகச் செயல்படக்கூடியவர். அவரை 19-வது ஓவர் வீசச் செய்தது ஸ்மித்தின் மோசமான கேப்டன்ஷிப்பைத்தான் காட்டுகிறது.

19-வது ஓவரை ஆர்ச்சரை வீசச் செய்திருந்தால் நிச்சயம் ரன்கள் கொடுத்திருக்க மாட்டார். கடைசி ஓவரில் பேட்ஸ்மேனுக்கு இன்னும் கூடுதல் அழுத்தம் உண்டாகி, ரன்களும் அதிகமாகத் தேவைப்பட்டிருக்கும். ராஜஸ்தான் வசம் வெற்றி எளிதாகியிருக்கும்.

ஆனால், இந்த சின்ன விஷயம் கூட ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித்துக்கு தெரியாமலா இருந்திருக்கும் என்பது சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை ஆர்சிபி அணியை புள்ளிப்பட்டியலில் மேலே கொண்டு வர வேண்டுமென்றே உனத்கத்திடம் 19-வது ஓவர் கொடுக்கப்பட்டதா (உஷ்! கண்டுக்காதீங்க...)

உனத்கத் தேவையா?

உனத்கத்துக்கும் ராஜஸ்தான் அணிக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்கிறது எனத் தெரியவில்லை. தொடர்ந்து அவரை அணியில் வைத்துள்ளார்கள். கோடிக்கணக்கில் விலை கொடுத்தும் அவரை ஒவ்வொரு ஏலத்திலும் எடுக்கிறார்கள். ஆனால், விக்கெட் வீழ்த்துவதிலோ, ரன்களைக் கட்டுப்படுத்துவதிலோ திறமையான பந்துவீச்சாளர் என உனத்கத்தைச் சொல்ல முடியாது. வள்ளலாக மாறிய உனத்கத் 4 ஓவர்கள் வீசி 46 ரன்களை வாரி வழங்கி சொந்த அணியின் தோல்விக்கே காரணமாகிவிட்டார்.

கோலியும், டிவில்லியர்ஸும் லெக்ஸ்பின் விளையாடுவதில் தடுமாறுவார்கள் என்பதால், உனத்கத்தை எடுத்ததற்குப் பதிலாக மயங்க் மார்கண்டேவை எடுத்திருக்கலாம். மயங்க் எடுத்திருந்தால் நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால், தொடர்ச்சியாக உனத்கத்துக்கு வாய்ப்புக் கொடுத்து நல்ல வீரர்களை ராஜஸ்தான் அணி வீணடித்து வருகிறது. சிஎஸ்கேயில் கேதார் ஜாதவ், ராஜஸ்தானில் உனத்கத்.

ஒட்டுமொத்தத்தில் கைமேல் கிடைத்த வெற்றியை ஆர்சிபி அணியிடம் தாரை வார்த்துவிட்டது ராஜஸ்தான் அணி.

வெற்றியின் நாயகன் ஏபிடி

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த வெற்றிக்கும் ஒரே ஏபிடி மட்டும்தான் காரணம். தோல்வியை நோக்கிச் சென்ற ஆர்சிபி அணியை இழுத்துப் பிடித்து யூடர்ன் அடிக்கவைத்து வெற்றியை நோக்கி இழுத்துச் சென்றவர் ஏ.பி.டிவில்லியர்ஸ் மட்டும்தான். உனத்கத் வீசிய 19-வது ஓவரில் என்ன ஷாட்கள்... 360 டிகிரி பேட்ஸ்மேன் என்பதை டிவில்லியர்ஸ் நிரூபித்துவிட்டார்.

மெதுவான தொடக்கம்

179 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. பிஞ்ச், படிக்கல் ஆட்டத்தைத் தொடங்கினர். பிஞ்ச் 14 ரன்களில் கோபால் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த கோலி, படிக்கல்லுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.

திவேஷியா வீசிய 13-வது ஓவரில் 35 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் ஆட்டமிழந்தார். கோலி, படிக்கல் ஜோடி 79 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்த ஓவரில் கார்த்திக் வீசிய பந்தில் கோலி 43 ரன்களில் திவேஷியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடி ஏபிடி

4-வது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ், குர்கீரத் சிங் களத்தில் இருந்தனர். இருவரும் நிதானமாக விளையாடியதால் வெற்றிக்கு தேவைப்படும் ரன் ரேட் உயர்ந்து கொண்டே வந்தது. கடைசி 30 பந்துகளில் 64 ரன்கள் ஆர்சிபி வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆர்ச்சர் வீசிய 16-வது ஓவரில் 10 ரன்கள் விளாசிய டிவில்லியர்ஸ், உனத்கத் வீசிய 17-வது ஓவரில் 9 ரன்கள் அடித்தார். கார்த்திக் வீசிய 18-வது ஓவரிலும் ஆர்சிபி அணி 10 ரன்கள் சேர்த்தது.

கடைசி இரு ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. உனத்கத் வீசிய 19-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டிவில்லியர்ஸ் அழுத்தத்தைக் குறைத்தார். குர்கீரத் பவுண்டரி அடிக்க 25 ரன்கள் கிடைத்தது. ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.

ஆர்ச்சர் வீசிய முதல் பந்தில் குர்கீரத் 2 ரன்கள், 2-வது பந்தில் ஒரு ரன், 3-வது பந்தில் டிவில்லியர்ஸ் 2 ரன்கள், 4-வது பந்தில் டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார் டிவில்லியர்ஸ்.

டிவில்லியர்ஸ் 55 ரன்களிலும், குர்கீரத் 19 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் கார்த்திக், திவேஷியா, கோபால் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

உத்தப்பா நம்பிக்கை

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஸ்டோக்ஸ், உத்தப்பா ஆட்டத்தைத் தொடங்கினர். உத்தப்பா அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஸ்டோக்ஸ் 15 ரன்களில் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம்ஸன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார்.

அதிரடியாக ஆடிய உத்தப்பா 22 பந்துகளில் 41 ரன்கள் (ஒரு சிக்ஸ், 7 பவுண்டரிகள்) சேர்த்து சாஹல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு பட்லர், ஸ்மித் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து விளையாடி 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பட்லர் 24 ரன்களில் வெளியேறினார்.

ஸ்மித் அரை சதம்

இறுதிவரை போராடிய ஸ்மித் 36 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து (6 பவுண்டரிகள், 1 சிக்ஸ்) மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஆர்ச்சரும் 2 ரன்களில் கால்காப்பில் வாங்கி மோரிஸ் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

திவேஷியா 19 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது.

பெங்களூரு தரப்பில் மோரிஸ் 4 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x