Published : 17 Oct 2020 04:55 PM
Last Updated : 17 Oct 2020 04:55 PM
ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 13-வது சீசன் நடந்து வருகிறது. மிகவும் முக்கியமான 2-வது பாதி தொடங்கியுள்ளது. சூப்பர் லீக் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் செல்லும் எனும் பரபரப்பு தொற்றத் தொடங்கியுள்ளது.
இந்த நேரத்தில் அணியில் கேப்டன்களை மாற்றிக் கவனத்தை திசை திருப்பவதும், வீரர்களை மாற்றுவதும் இயல்பு. அந்தவகையில் நேற்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலகியதால், மோர்கன் கேப்டன்ஷிப்பை ஏற்றார்.
கொல்கத்தா அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின்படி தினேஷ் கார்த்திக் தாமாக முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார் என்று கூறினாலும், அதில் பல்வேறு அரசியல் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (உஷ்... கண்டுக்காதீங்க!)
தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி நன்றாக விளையாடி வந்தபோதிலும் கூட திடீரென மோர்கனிடம் கேப்டன்ஷிப் பொறுப்பைக் கொடுக்க வேண்டியதன் கேள்வியும், விவாதமும் சமூக வலைதளத்தில் நடக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், ஐபிஎல் தொடரில் ஓர் அணியின் கேப்டனைத் தொடரின் பாதியில் நீக்குவதும், மாற்றுவதும் வழக்கமான ஒன்றுதான். இதற்கு முன் 8 முறை இதுபோன்று நடந்துள்ளது என்றால் நம்புவீர்களா? அதைத்தான் விரிவாகப் பார்க்கப்போகிறோம்
2008- டெக்கான் சார்ஜர்ஸ்
2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய நேரத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கேப்டனாக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், திடீரென காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே விலகுவதாக அறிவித்தார். இதனால், கேப்டன் பொறுப்பை ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் ஏற்றார்.
2012 - டெக்கான் சார்ஜர்ஸ்
2012-ம்ஆண்டு ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த இலங்கைவீரர் குமார் சங்கக்கரா பேட்டிங்கில் சொதப்புகிறார் என்று அவரிடம் இருந்து கேப்டன் பதவி பாதியிலேயே பறிக்கப்பட்டு ஆஸி. ஆல்ரவுண்டர் கேமரூன் வொய்ட்டிடம் பொறுப்பு வழங்கப்பட்டது.
2013 - மும்பை இந்தியன்ஸ்
2013-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து ஆடத் தொடங்கினார். ஆனால், பாண்டிங் பேட்டிங் ஃபார்ம் சரியில்லை எனக் கூறி அவருக்குப் பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டே மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2014 - சன்ரைசரஸ் ஹைதராபாத்
2013-ம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஷிகர் தவண் நியமிக்கப்பட்டு சிறப்பாக வழிநடத்தினார். 2014-ம் ஆண்டிலும் அணியை வழிநடத்தியபோது, சில தோல்விகளை சன்ரைசர்ஸ் அணி சந்தித்தால், தவணை நீக்கிவிட்டு மே.இ.தீவுகள் வீரர் டேரன் சாமேவைக் கேப்டனாக நியமித்தது அணி நிர்வாகம்.
2015 - ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த வாட்ஸன் காயத்தால் விலகவே ஸ்மித் தலைமையில் அந்த அணி 4 வெற்றிகளைப் பெற்றது. வாட்ஸன் காயத்திலிருந்து மீண்டு வந்தபின் மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது ஸ்மித் தலைமையில் பெற்ற வெற்றிகளைக் கூட பெறவில்லை. இதனால் வாட்ஸனிடம் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஸ்மித்திடம் பாதியிலேயே வழங்கப்பட்டது.
2016 - கிங்ஸ்லெவன் பஞ்சாப்
2016-ம் ஆண்டில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி மோசமாகச் செயல்பட்டு கடைசி நிலையில் புள்ளிப்பட்டியலில் இருந்தது. கேப்டன் டேவிட் மில்லர் 6 போட்டிகளில் 76 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இதையடுத்து, மில்லரிடம் இருந்து கேப்டன் பொறுப்பு முரளி விஜய்யிடம் தரப்பட்டது. இருப்பினும் அந்தத் தொடரில் பஞ்சாப் அணி கடைசி இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.
2018- டெல்லி டேர்டெவில்ஸ்
2018-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த கவுதம் கம்பீர் தலைமையில் அணி மோசமாகச் செயல்பட்டது. இதனால் சோதனை முயற்சியாக ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் அணி களமிறங்கி சூப்பராகச் செயல்பட்டு வெற்றி பெற்றது. இதனால், கம்பீர் கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேப்டன் பொறுப்பு தரப்பட்டது.
2019- ராஜஸ்தான் ராயல்ஸ்
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஸ்மித் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பு அஜின்கயே ரஹானேவிடம் தரப்பட்டது. 2019-ம் ஆண்டு மீண்டும் ஸ்மித் விளையாட அணிக்குள் வந்தபோது சில ஆட்டங்களுக்கு கேப்டன் பொறுப்பு தரப்படவில்லை. ஆனால், திடீரென ரஹானேவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஸ்மித்திடம் வழங்கப்பட்டது. இருப்பினும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கூட செல்லவில்லை.
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT