Published : 15 Oct 2020 02:49 PM
Last Updated : 15 Oct 2020 02:49 PM
ஐபிஎல் 2019-ல் அனைத்துப் போட்டிகளிலும் ஆடி 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ‘பர்ப்பிள் கேப்’ வாங்கியவர் சிஎஸ்கேவின் தென் ஆப்பிரிக்க லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர்.
சிஎஸ்கேவின் விசித்திரமான காய்நகர்த்தல்களினால் 2020 ஐபிஎல் தொடரில் ‘பெஞ்ச்சில்’ அமரவைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனின் ஆகச்சிறந்த பவுலர் இந்த முறை ‘ட்ரிங்க்ஸ்’ சுமந்து வருவதைப் பார்த்து ஆதங்கப்பட்ட ரசிகர்கள் பலர் அவரிடம் ஏன் இந்த முறை இன்னும் ஆடவில்லை என்று கேள்வி கேட்டுத் துளைக்கின்றனர்.
ஆனால் ‘பெஞ்சில்’அமர வைக்கப்பட்டது குறித்து சற்றும் மனம் தளராத இம்ரான் தாஹிர் ‘நான் விளையாடுகிறேனா இல்லையா என்பதல்ல விஷயம், என் அணி வெற்றி பெற வேண்டும் என்பதே’ என்று வழக்கமான ஒரு பதிலை அளித்துள்ளார். 8வது போட்டியில் தொடர்ச்சியாக பெஞ்ச் தான் தாஹிருக்குக் கிடைத்த பலாபலன்.
சாவ்லா சீரான முறையில் வீச தடுமாறுகிறார், ஆன போதிலும் தோனி, இம்ரான் தாஹிரைக் கொண்டு வரவில்லை. சாம் கரண், டுபிளெசிஸ், வாட்சன், பிராவோ என்ற 4 அயல்நாட்டு வீரர்கள் போதும் என்கிறார் தோனி. ஆனால் பிராவோவை உட்கார வைத்து இம்ரான் தாஹிரைக் கொண்டு வர வேண்டிய நிலை பிற்பாடு ஏற்படலாம்.
இந்நிலையில் தன் சமூக ஊடக பக்கத்தில் ட்வீட் செய்துள்ள அவர், “நான் விளையாடிய போது நிறைய வீரர்கள் எனக்கு குளிர்பானம் எடுத்து வருவார்கள். இப்போது தகுதியான வீரர்கள் களத்தில் ஆடும்போது நான் ட்ரிங்க்ஸ் சுமந்து செல்கிறேன். இது என் கடமையல்லவா.
நான் விளையாடுகிறேனா இல்லையா என்பதை விட அணி வெற்றி பெறுகிறது என்பதே முக்கியம். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாகச் செயல்படுவேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அணிதான் முக்கியம்” என்று ஆங்கிலத்தில் ட்வீட் செய்துள்ளார்.
ஏன் தமிழில் ‘பஞ்ச் டயலாக்’ ட்வீட் இல்லையா இம்ரான் தாஹிர்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT