Published : 14 Oct 2020 07:49 AM
Last Updated : 14 Oct 2020 07:49 AM
வித்தியாசமான வியூகங்கள், கட்டுக்கோப்பான பந்துவீச்சு, திட்டமிடலை சரியாக செயல்படுத்தியது போன்றவற்றால், துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துள்ளது தோனி தலைமை. சிஎஸ்கே அணி இதுவரை 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு தொடர்ந்து 2-வது தோல்வி. ராஜஸ்தான் அணிக்கு எதிராக திவேத்தியா, பராக் ஆட்டத்தால் வெற்றியைக் கோட்டை விட்ட சன்ரைசர்ஸ் இந்த போட்டியிலும் சேஸிங் செய்ய முடியாமல் தோற்றது. சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் 5-வது இடத்தில் இருக்கிறது.
மீண்டும் 2010 வருமா
கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி நினைவுபடுத்துகிறது. அப்போதும், இதேபோல சிஎஸ்கே 7 போட்டிகளி்ல முதல் இரு போட்டிகள் மட்டுேம வென்று, அடுத்த 5 போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்து. ஆனால், அதன்பின் நடந்த அடுத்த 7 போட்டிகளிலும் வென்று சூப்பர் லீக் சுற்று சென்று சாம்பியன் பட்டம் வென்றது. அதுபோல் இந்த முறையும் நடந்துவிடாதா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு…
2010ம் ஆண்டில் சிஎஸ்கே அணியின் வெற்றிப் பயணத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது தென்மாநிலத்தின் பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிதான். அந்த வெற்றிக்குப்பின்புதான் சிஎஸ்கே அசைக்க முடியாத வலிமையுடன் முன்னேறியது. இந்த முறையும் தென்மாநில அணியான சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சிஎஸ்கே. அடுத்தடுத்து வரும் போட்டிகள் சிஎஸ்கே அணிக்கு வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
ஆட்டநாயகன்
பேட்டிங்கில் 25 ரன்கள், பீல்டிங்கில் 2 கேட்சுகள் பிடித்தது, பந்துவீசி முக்கிய விக்கெட்டை வீழ்த்தியது என ஆல்ரவுண்டராக ஜொலித்த ரவிந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் ஜடேஜா வீழ்த்திய பேர்ஸ்டோவின் விக்கெட் திருப்புமுனையானது. பேர்ஸ்டோ மட்டும் களத்தில் நின்றிருந்தால் ஆட்டம் திசை திரும்பியிருக்கும்.
சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை, கடந்த போட்டிகளில் செய்த தவறுகளை இந்த ஆட்டத்தில் திருத்த முயன்றுள்ளனர். அதற்கு பலனும் கிடைத்தது. சாம்கரனை தொடக்க வீரராக களமிறக்கியது, துபாய் மைதானம் பெரியது என்பதால் கூடுதல் பந்துவீச்சாளராக பியூஷ் சாவ்லாவைக் கொண்டு வந்தது, ஜடேஜாவை முன்கூட்டியே களமிறக்கியது,வாட்ஸனை 3-வது வீரராக இறங்க வைத்தது என பரிசோதனை முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
தெளிவு
குறிப்பாக கடந்த 7 போட்டிகளிலும் டாஸ் வென்றால் சேஸிங் செய்த சிஎஸ்கே அணி, முதல் முறையாக பேட்டிங் செய்து ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்குள்ள எதிரணியைக் கட்டுப்படுத்தி வெற்றி கண்டது.
பல கலைப்புகளுப்பின் நடுவரிசையில் எந்த பேட்ஸ்மேனை வைத்துக்கொள்ளலாம் எனும் தெளிவு கிடைத்துள்ளது. தொடக்க ஆட்டத்துக்கு “பிஞ்ச் ஹிட்டர்” எனச் சொல்லப்படும் பேட்ஸ்மேன் சாம்கரன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதை சிஎஸ்கே இறுக்கமாக வரும்போட்டிகளில் பிடித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
அதிகமான டாட் பந்துகள்
ஆனால் பேட்டிங்கில் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன் சேர்ப்பதில் இன்னும் சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டவில்லை. அம்பதி ராயுடு, வாட்ஸன் கூட்டணி இருவரும் சேர்ந்து ஏராளமான டாட்பந்துகளை விட்டனர். ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கே அணி நேற்று 48 டாட்பந்துகளை விட்டது. அதாவது 8 ஓவர்களை அடிக்கவேயில்லை 12 ஓவர்களில் மட்டுமே ரன் சேர்த்தது. டாட் பந்துகளைக் குறைத்து ஒவ்வொரு பந்திலும் ரன் சேர்க்க முயன்றால் ஸ்கோர் மிகப்பெரிய இலக்கைநோக்கிச் செல்லும்.
ஓட்டைகள் அடைக்கும் முயற்சி
துபாய் போன்ற மைதானத்தில் 167ரன்கள் என்பது நிச்சயம் எதிரணியின் வெற்றியை தடுக்கக்கூடிய சிறப்பான ஸ்கோர் எனச் சொல்ல முடியாது. இருப்பினும் 7 பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு தோனி, தனது புதிய வியூகங்களால் எந்தப்ப ந்துவீச்சாளரை எப்போது வீசச்செய்வது, எந்த பேட்ஸ்மேன் எந்த ஷாட்டில் பலவீனம் என்பதை தெரிந்து நெருக்கடி அளித்து பந்துவீசச் செய்தற்கு பலன் கிடைத்தது.
சிஎஸ்கே எனும் படகில் ஏராளமான ஓட்டைகள் இருக்கிறது என்று கடந்த போட்டியின் தோல்வியின் போது கூறிய கேப்டன் தோனி ஓட்டைகளை அடைக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்.
சிஎஸ்கே அணியின் இந்த வெற்றி சூப்பர் லீக் சுற்றுக்கு செல்லுமா என்று கிண்டல் செய்தவர்களுக்கும், கேள்வி எழுப்பியவர்களுக்கும் நிச்சயம் பதிலாக இருக்கும். முக்கியமாக சிஎஸ்கேயின் ரசிகர்களுக்கு இந்த வெற்றிய “அப்பாடா” எனும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
சிறப்பான பந்துவீச்சு
சிஎஸ்கே வீரர்கள் பந்துவீச்சில் முத்திரை பதித்துவிட்டார்கள். கடைசி இரு ஓவர்களை வீசிய பிராவோ, தாக்கூர் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தாக்கூர், சாம் கரன், ஜடேஜா ஆகியோர் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அளித்தனர். சரியான நேரத்தில் பிராவோ ரன் அவுட் செய்து மணிஷ் பாண்டே விக்கெட்டை சாய்த்து ஆட்டத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.
ஒரே ஓவரில் வார்னர், பாண்டே ஆட்டமிழந்தவுடன் சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி தொற்றிக்கொண்டது. அதைப் பயன்படுத்திய சிஎஸ்கே வீரர்கள் தங்களின் தொடர் தாக்குதலால் சன்ரைசர்ஸை எளிதாக வீழ்த்தினர்.
நடுவரிசை பேட்டிங் மோசம்
சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை நடுவரிசைபேட்டிங் வலிவிழந்துவிட்டது இல்லை… நடுவரிசையில் விளையாட பேட்ஸ்மேனே இல்லை என்பதை வெளிச்சம்போட்டு காட்டிவிட்டனர். பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யாவிட்டால், அடுத்தடுத்துவரும் ஆட்டங்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மோசமாகப் போகலாம்.
பேட்டிங்கில் வலுவில்லாமல் இருந்ததால்தான் கடந்த லீக் ஆட்டங்களி்ல டாஸ் வென்றவுடன் வார்னர் யோசிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்து நல்ல ஸ்கோர் செய்து பந்துவீச்சில் சுருட்ட முயன்றுள்ளார்.
வார்னர், வில்லியம்ஸன், பாண்டே ஆகியோருக்குப்பின் நிலைத்து ஆடுவதற்கு எந்த பேட்ஸ்மேனும் இ்ல்லை என்பது நிதர்சனம். ராகுல் திவேஷியா போன்று ஆட்டத்தை திருப்பக்கூடிய பேட்ஸ்மேன்கள் சன்ரைசர்ஸ் அணியில் யாருமில்லை.
புவி வெற்றிடம்
பந்துவீச்சில் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் இல்லாத வெற்றிடம் தெரிகிறது. ஜேஸன் ஹோல்டரை அடுத்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் பயன்படுத்தலாம். கலீல் அகமது, நடராஜன் இருவரும் விக்கெட் எடுத்தாலும் ரன்களை வாரிக் கொடுக்கின்றனர். வெளியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருக்கும் பில்லி ஸ்டேன்லேக், முகமது நபி, பாசில் தம்பி வீரர்களை பயன்படுத்த முயற்சிக்கலாம்.
விக்கெட் சரிவு
168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. வார்னர், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினர். சிஎஸ்கே வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் தொடக்கத்திலிருந்தே ரன் சேர்க்க பேர்ஸ்டோ, வார்னர் சற்று திணறினர். ஆனால், 4-வது ஓவரில் சன்ரைசர்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சாம்கரன் வீசிய 4-வது ஓவரின் 3-வது பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வார்னர் 9ர ன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே அதே ஓவரில் ரன்அவுட் ஆகி வெளியேறியது சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை அளித்தது.
பேர்ஸ்டோவுடன், வில்லியம்ஸன் வந்து இணைந்தார். இருவரும் நிதானமாக அணியை வழிநடத்தினர். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு சன்ரைசர்ஸ் 40 ரன்களைச் சேர்த்திருந்தது.
பந்துவீச்சில் மாற்றம் செய்த தோனி ஜடேஜாவை பந்துவீசச் செய்தார். அதற்கு பலனும் கிடைத்து. ஜடேஜா வீசிய 10-வது ஓவரில் பேர்ஸ்டோ 23 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பின் சீரான இடைவெளியில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.
கடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு சவாலாக இருந்த பிரியம் கார்க், 4-வது விக்கெட்டுக்கு வந்தார். வில்லியம்ஸுடன் சேர்த்து நிதானமாக கார்க் செய்துவந்தார். அப்படியே கார்க் தொடர்ந்திருந்தால் வெற்றியை நோக்கி அணியை நகர்த்தியிருக்கலாம்.
வில்லியம்ஸன் போராட்டம்
ஆனால், கரன்சர்மா வீசிய 15-வது ஓவரில் தேவையில்லாமல் தூக்கி அடித்து டீப் மிட்விக்கெட்டில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 16 ரன்னில் ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 40ரன்கள் சேர்த்தனர்.
5-வது விக்கெட்டுக்கு வந்த விஜய் சங்கர் 12 ரன்னில் பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து ரஷித் கான் களமிறங்கினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தபோதிலும் வில்லியம்ஸன் நிதானமாக ஆடிய 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது.
இதனால் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்படத்தொடங்கியது. கரன்சர்மா வீசிய 18-வது ஓவரில் முதல்பந்தில் பவுண்டரி அடித்த வில்லியமஸ்ன், அடுத்த பந்தில் லாங் ஆனில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து 57ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான்பாஸ் நதீம் களமிறங்கினார். ரஷித் கான் அதிரடியாக ஒரு சிக்ஸர், இருபவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தி அதிர்ச்சியளித்தார்.
ஆனால் தாக்கூர் வீசிய 19-வது ஓவரில் ரஷித் கான் ஹிட்விக்கெட் ஆகி 14 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் சன்ரைசர்ஸ் வெற்றி வாய்ப்பு தகர்ந்தது.
பிராவோ வீசிய கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. நதீம், சந்தீர் சர்மா களத்தில் இருந்தனர். நதீம் 5 ரன்கள் சேர்த்த நிலையில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சந்தீப் சர்மா ஒரு ரன்னிலும், நடராஜன் ரன் சேர்க்காமலும் களத்தில் இருந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 147ரன்கள் சேர்த்து 20ரன்னில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே தரப்பில் கரன் சர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டுகளையும், தாக்கூர், ஜடேஜா, சாம் கரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
திடீர் மாற்றம்
டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த முறை வழக்கத்துக்கு மாறாக முதலில் பேட் செய்தார். அணியில் ஜெகதீஸனுக்கு பதிலாக கூடுதல் பந்துவீச்சாளராக பியூஷ் சாவ்லா சேர்க்கப்பட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம்கரன், டூப்பிளசிஸ் களமிறங்கி அதிர்ச்சியளித்தனர்.
பேட்டிங் வரிசையில் மாற்றம் தேவை என்று பல முன்னணி வீரர்கள், வர்ணனையாளர்கள் கூறிய நிலையில் சாம்கரன் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
ஆட்டத்தின் 3-வதுஓவரில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து டூப்பிளசிஸ் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து வாட்ஸன் களமிறங்கி சாம்கரனுடன் சேர்ந்தார். சாம்கரன் எந்தவிதமான தயக்கமும் இன்றி பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். சிஎஸ்கே ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
நல்ல கூட்டணி
சந்தீப் சர்மா வீசிய 5-வது ஓவரில் க்ளீன்போல்டாகி சாம்கரன் 31 ரன்களில்(21பந்துகள்,2 சிக்ஸர்,3பவுண்டரி) ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ராயுடு வந்து வாட்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அவ்வப்போது ராயுடு சிக்ஸர்களையும், பவுண்டரிகளை அடித்தார்.
இருவரும் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதில்தான் கவனம் செலுத்தினார்களேத் தவிர ரன்களை ஓடி எடுப்பதில் சோம்பறித்தனத்தை வெளிப்படுத்தினர். 14 ஓவரில் சிஎஸ்கே அணி 100ரன்களை எட்டியது.
3-வது விக்கெட்டுக்கு இருவரும் 81 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கலீல் அகமது வீசிய 15-வது ஓவரில் ராயுடு 41 ரன்கள் சேர்த்த நிலையில்(34 பந்து, 2 சிசிக்ஸர்,3 பவுண்டரி) விக்கெட்டை இழந்தார். அடுத்து தோனி களமிறங்கினார்.
நடராஜன் வீசிய 16-வது ஓவரில் வாட்ஸன் 42 ரன்னில் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியின் திரும்பினார். இருவரின் விக்கெட்டும் அடுத்தடுத்த ஓவரில் விழுந்தது. 5-வது விக்கெட்டுக்கு ஜடேஜா களமிறங்கி தோனியுடன் சேர்ந்தார்.
ஜடேஜா அதிரடி
தோனி தனது வின்டேஜ் ஷாட்களை ஆடி பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து(ஒருசிக்ஸர்,2பவுண்டரி) நடராஜன் பந்துவீச்சில் தோனி விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த பிராவோ டக்அவுட்ஆகி கலீல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். தீபக் சாஹர், ஜடேஜா ஜோடி இறுதிவரை களத்தில் இருந்தனர். ஜடேஜா 25ரன்னிலும், சாஹர் 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் சந்தீப் சர்மா, கலீல் அகமது, நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT