Last Updated : 12 Oct, 2020 03:16 PM

1  

Published : 12 Oct 2020 03:16 PM
Last Updated : 12 Oct 2020 03:16 PM

தோனி வயதில் யாராவது விளையாடமுடியுமா? விமர்சிப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்: சயத் கிர்மானி ஆதரவு

எம்.எஸ்.தோனி : கோப்புப்படம்

லக்னோ

சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயதில் யாராவது விளையாட முடியுமா? தன்னைத் தகுதியுள்ள வீரராக இன்னும் வைத்துள்ளார். அவரை விமர்சிப்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சயத் கிர்மானி தெரிவித்தார்.

13-வது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கியபோது, தோனியின் விளையாட்டு மீது ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால், கடந்த ஓராண்டாக எந்த சர்வதேசப் போட்டியிலும் விளையாடாமல் இருந்து, ஆகஸ்ட் மாதம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வும் அறிவித்தார். இதனால் தோனி மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது.

ஆனால், ஐபிஎல் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் சிஎஸ்கே அணியின் செயல்பாடும் மோசமாகி தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்து வருகிறது. தோனியும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் ரசிகர்களில் ஒரு தரப்பினர் தோனியின் விளையாட்டு மீது அதிருப்தி அடைந்து சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கத் தொடங்கினர்.

வெற்றிபெற வேண்டிய போட்டிகளில்கூட கோட்டை விடுகிறார் தோனி, முன்னாள் சாம்பியன் சிஎஸ்கே அணி 7-வது இடத்துக்குச் சென்றுவிட்டது என்று காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சயத் கிர்மானி, தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் உயர்வு எவ்வாறு வந்து அவரை மேலே கொண்டு செல்லுமோ அதேபோல சறுக்கல் இருப்பதும் இயல்புதான். நேரத்துக்கு ஏற்றாற்போல், சில சம்பவங்களும் மாறுவது இயற்கை. ஆனால், தோனியின் திறமையைப் பற்றி இப்போது சந்தேகப்படுவோர், விமர்சிப்பவர்களை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்.

கிரிக்கெட்டில் ஒரு நேரத்தில் மிகச்சிறந்த ஃபினிஷர் என்பதை மறந்துவிடக்கூடாது. நீண்டகால ஓய்வுக்குப் பின் மீண்டும் கிரிக்கெட் ஆட தோனி வந்துள்ளார். அதன் பாதிப்பு ஐபிஎல் தொடரில் சற்று இருக்கத்தான் செய்யும்.

தோனிக்கு இப்போது இருக்கும் வயதில் எனக்குத் தெரிந்து எந்த வீரரும் இவ்வளவு ஆரோக்கியமாக, உடல் தகுதியுடன் இருந்து விளையாடியதில்லை. மனப் பக்குவமும் இருந்ததில்லை. இப்போதுள்ள இளைஞர்களே தோனியின் உற்சாகத்துக்கு இணையாக இருப்பார்களா எனத் தெரியாது.

இந்த வயதில் எதிர்காலம் குறித்து ஒவ்வொரு வீரருக்கும் சில கனவுகள், எதிர்பார்ப்புகள், சிந்தனைகள் வரும். அதனால் பதற்றமும் இருக்கும். இது இயல்பானது. இதை நாம் வெளிப்படையாக ஏற்க வேண்டும்”.

இவ்வாறு சயத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி அதில் 6 முறை பேட்டிங் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக 112 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதில் தோனியின் அதிகபட்சம் 47 ரன்களாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x