Published : 11 Oct 2020 09:05 AM
Last Updated : 11 Oct 2020 09:05 AM
சிஎஸ்கே எனும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. மிகப்பெரிய ஷாட்கள் ஆடக்கூடிய வீரர்கள் இல்லாதது மிகப்பெரிய குறை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. 170 ரன்களைத் துரத்திய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியை இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி இதற்கு முன் வென்றதில்லை. 37 ரன்களில் சிஎஸ்கே அணியை வென்றது ஆர்சிபியின் வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும்.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 5 தோல்வி, 2 வெற்றி என மொத்தம் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.
இந்தப் போட்டியின் தோல்விக்குப் பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:
''நாங்கள் பந்துவீசிய கடைசி 4 ஓவர்களில் இன்னும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி சிறப்பாக முடித்திருப்பது அவசியம் என நினைக்கிறேன். பேட்டிங்கைப் பொறுத்தவரை சிறிது கவலையளிக்கும் விதத்தில் இருந்து வந்தது. இன்று வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. அதைச் சரிசெய்ய ஏதாவது செய்வது அவசியம்.
பேட்டிங்கில் மிகப்பெரிய ஷாட்களை ஆடுவது அவசியம் என நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் மிகப்பெரிய ஷாட்களை ஆட வேண்டும். ஆனால், கடந்த சில போட்டிகளாக நாம் எவ்வாறு விளையாடி இருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இது இருக்கிறது.
இந்தப் போட்டியில் 6-வது ஓவரிலிருந்து பேட்டிங்கில் சக்தி இழந்துவிட்டதாகவே நினைக்கிறேன். தனிப்பட்ட பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவருக்கும் நாம் எவ்வளவு நம்பிக்கை அளிக்கிறோம் என்பதில் இருக்கிறது. இந்தப் போட்டியில் 6-வது ஓவரிலிருந்து 14-வது ஓவர் வரை பந்துவீச்சாளர்களின் திட்டத்துக்கு எதிராகச் சரியான தி்ட்டமிடல்களை வகுத்து பேட்ஸ்மேன்கள் களமிறங்கவில்லை என நினைக்கிறேன்.
நான் வீரர்களிடம் அடிக்கடி கூறுவது ஒன்றுதான். கடந்த போட்டியின் முடிவைப் பற்றி நினைத்தால் உங்களுக்கு சுமைதான் அதிகரிக்கும். தற்போது நடப்பில் உள்ள போட்டியின் மீதும், அதை எவ்வாறு வெற்றியாக மாற்றுவதிலும் கவனம் செலுத்துங்கள் என்றுதான் கூறுவேன். பந்துவீச்சில் எதிரணியை நாங்கள் கட்டுப்படுத்தினோம். ஆனால், கடைசி 4 ஓவர்களில்தான் நாங்கள் தவறு செய்துவிட்டோம்.
எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஏராளமான சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். ஆனால், ஏதாவது ஒரு இடத்தில்தான் ஒருவர் விளையாடமுடியும். முதலில் 5 பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினோம். இப்போது 6 பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறோம். எங்களின் மிகப்பெரிய கவலை பேட்டிங்தான். அடுத்துவரும் போட்டிகளில் பேட்டிங்கைச் சரிசெய்ய தீவிரமாக முயல்வோம்''.
இவ்வாறு தோனி தெரிவி்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT