Published : 10 Oct 2020 04:30 PM
Last Updated : 10 Oct 2020 04:30 PM

ரிஷப் பந்த் அணிந்திருந்தது ஹெல்மெட்டா, முக்காடா? அஸ்வினின் மன்கடிங்கிலிருந்து பட்லரைக் காப்பாற்றிய கேட்ச் , ராஜஸ்தான் ‘முட்டை’- சேவாகின் ஜாலி ரிவியூ

விரேந்திர சேவாக் தன் அதிரடி ஆட்டத்துக்கு மட்டும் பெயர் பெற்றவர் அல்ல, ஜாலியாகக் கலகலவென நகைச்சுவையாக கிரிக்கெட் பற்றி மட்டுமல்ல எதைப்பற்றியும் கருத்து தெரிவிப்பவர்.

விரூ கி பைதக் என்ற ஷோ மூலம் சேவாக் தன் ஐபிஎல் போட்டிகள் குறித்த கருத்துகளை பல சமயங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தி வருகிறார், அன்று சிஎஸ்கே வீரர்கள் அரசு ஊழியர்கள் போல் இருக்கின்றனர், ஆடினாலும் ஆடாவிட்டாலும் சம்பளம் என்று கடும் கேலி செய்தார்.

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆட்டத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை ராஜஸ்தான் அணியை மட்டுமல்ல டெல்லி அணியையும் கடுமையாகக் கேலி செய்தார்.

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் தொடர்ச்சியாக தன் 4வது தோல்வியைச் சந்திக்க அவர் தன் வீடியோவில் கோவிந்தா, சஞ்சய் தத் நடித்த ஜோடி நம்பர் 1 படத்தின் பிரபல பாடலான அண்டே கா பண்டா பாடலை பாடி முட்டையை வைத்து ராஜஸ்தான் ராயல்ஸை கேலி செய்தார், அதோடு உலக முட்டை தினத்தை கொண்டாடினார்.

அந்த வீடியோவில், “ராஜஸ்தான் தானே தோற்றதா, அல்லது டெல்லி முயன்று வென்றதா? டெல்லிக்கு 2 புள்ளிகள் கிடைக்க ராஜஸ்தானுக்கு ‘முட்டை’. 20 ஒவர்கள் முழுக்க தாங்கவில்லை.

ஸ்மித் டாஸ் வென்று டெல்லியை பேட் செய்யச் சொன்னார். டெல்லி அதிரடியாகத் தொடங்கினர், ஆனால் தவணின் செருக்கை ஆர்ச்சர் அடக்கினார். பிரிதிவி ஷாவையும் ஆர்ச்சர் நிறுத்தினார்.

2 ரன் அவுட்கள் ஆனது, ஸ்ரேயஸ் அய்யர், ஜைஸ்வாலின் சூப்பர்ப் பீல்டிங்குக்கு இரையானார். இன்னொரு ரன் அவுட் ரிஷப் பந்த் விக்கெட்டைப் பறித்தது, அவர் ஹெல்மெட் அணிந்திருந்தாரா அல்லது புது மணப்பெண் போல் முக்காடு போட்டிருந்தாரா என்று தெரியவில்லை. ரன் ஓடும் போது ரிஷப் பந்த் பந்தையும் பார்க்கவில்லை, பீல்டரையும் பார்க்கவில்லை, ஸ்டாய்னிஸையும் பார்க்கவில்லை. ஸ்டாய்னிஸ் டெல்லியை மீட்டார்.

ஆனால் தாக்கமேற்படுத்திய இன்னிங்ஸை ஆடியது ஹெட்மையர். கடவுள் அவருக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தார். அவர் இன்னிங்ஸ்தான் டெல்லி அணி 184 ரன்கள் உயரக் காரணம். இது ஷார்ஜாவில் சாதாரணமாக விரட்டப்பட வேண்டிய இலக்கு. இதற்கு ராஜஸ்தானுக்குத் தேவை நல்ல தொடக்கம், ஆனால் பட்லர் அஸ்வினை நினைத்துக் கவலைப்பட்டார். ஆனால் இம்முறை அஸ்வினின் மன்கடிங்கிலிருந்து பட்லரை தவண் தன் அபார கேட்சினால் காப்பாற்றினார். மிடில் ஓவர்களில் அஸ்வின், நோர்ட்டியே, ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஸ்மித், சாம்சங், ஜெய்ஸ்வால், மஹிபால் லோம்ரோர் ஆகியோரை வெளியேற்றினர்.

சஞ்சு சாம்சன் பெரிய ஏமாற்றம், ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வருகிறார். 440 வாட் கரண்ட் ஷாக் அடித்து போல் ஆடுகிறார். ஷேன் வார்னுக்கு இன்னொரு ஷார்ஜா துர்சொப்பனமாக அமைய அவரது சக ஆஸி. வீரர் ரிக்கி பாண்டிங் குஷியாக இருக்கிறார்,.

இவ்வாறு அந்த வீடியோவில் இந்தியில் பேசினார் சேவாக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x