Published : 10 Oct 2020 07:37 AM
Last Updated : 10 Oct 2020 07:37 AM
அஸ்வின், ரபாடா, ஸ்டாய்னிஸ் ஆகியோரின் கட்டுக்கோப்பான, துல்லியமான பந்துவீச்சு, விக்கெட் வீழ்த்தும் திறமை ஆகியவற்றால், ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்து 46 ரன்களில் தோல்வி அடைந்தது. 220 ரன்களையே கட்டுப்படுத்த முடியாத ஷார்ஜாவில் 184 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்ததோடு 46 ரன்களில் வெற்றி பெற்றிருக்கிறது டெல்லி அணி.
முதலிடத்தில் டெல்லி
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு டெல்லி கேபிடல்ஸ் முன்னேறியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 5 வெற்றிகள், ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகள், 4 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் பின்தங்கியுள்ளது.
வெற்றியின் நாயகர்கள்
டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். டெல்லி அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திடீர் 'கொலாப்ஸ்' ஆனபின் 184 ரன்களை டெல்லி அணி சேர்க்குமா என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால், ஸ்டாய்னிஷ், ஹெட்மயர் இருவரும் நடுவரிசையில் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர்.
ஷார்ஜா போன்ற பேட்டிங் சாதகமான மைதானங்களில் 200 ரன்களுக்குள் டெல்லி அணி சேர்த்ததே நல்ல ஸ்கோர் அல்ல. ஆனால், அந்த குறைந்த இலக்கையும் வைத்து தங்களின் திறமையான வீரர்களின் பந்துவீச்சால், ராஜஸ்தான் அணியை தெறிக்கவிட்டதற்கு டெல்லி அணிக்கு நிச்சயம் பாராட்டுக்கள். ஸ்ரேயாஸ் அய்யரின் ஸ்மார்ட் கேப்டன்ஷிப் மெருகேறி வருகிறது.
சரியான வியூகம்
184 ரன்கள் என்று ஷார்ஜா மைதானத்தில் தொட்டுவிடும் இலக்குதான். ஆனால், தொடக்கத்திலேயே ராஜஸ்தான் அணி டாப்ஆர்டர் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது அந்த அணிக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது. டாப்ஆர்டர் போய்விட்டாலே அந்த அணியில் விளையாடுவதற்கு யாருமில்லை என்பது வேறு விஷயம்.
டாப்ஆர்டரை காலி செய்துவிட்டாலே ராஜஸ்தான் கதை கந்தல் என்பதை சரியாகப் பிடித்துக்கொண்ட டெல்லி அணி அடுத்தடுத்து கொடுத்த அழுத்தங்களை தாங்க முடியாமல் ராஜஸ்தான் சுருண்டது. சரியான வியூகத்தால் ராஜஸ்தானை சிதைத்துவிட்டது டெல்லி அணி.
ஆர்ச்சர், ரபாடா போட்டி
குறிப்பாக ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் பந்துவீச்சில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களை மிரட்டியது போல் 'நாங்களும் மிரட்டுவோம்' என்ற கணக்கில் டெல்லி அணியில் ரபாடா பந்துவீச்சில் பட்டையக் கிளப்பினார். இரு வேகப்புயல்களும் நேற்று 150கி.மீ வேகத்துக்கு குறைவில்லாமல் பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு 'கிலி' ஏற்படுத்தினர்.
ரபாடா 3.4 ஓவர்கள் வீசிய 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். உண்மையில் இருவருமே சர்வதேச தரமான பந்துவீச்சாளர்கள் என்று நிரூபித்த நிலையில் ஆர்ச்சர் பந்துவீச்சு 'டாப் கிளாஸ்'.
'பெர்ஃபியூம் பவுலிங்' என்று கிரிக்கெட்டில் சொல்வார்கள், பேட்ஸ்மேன்களுக்கு ஷார்ட் பிட்ச்சில் பவுன்ஸராக ஏற்றி டெல்லி பேட்ஸ்மேன்களை நிற்க வைத்து ஆர்ச்சர் படம் காட்டினார்.
அஸ்வின்-பட்லர்
வெற்றிக்கு விக்கெட் தேவை என்றபோது, பட்லரை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தார் அஸ்வின். ஆனால் இந்த முறை பட்லரை 'நான்-ஸ்ட்ரைக்க'ர் பக்கம் வீழ்த்தாமல் பந்துவீச்சில் அஸ்வின் பெவிலியன் அனுப்பினார். 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அனுபவத்தை வெளிப்படுத்திய அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஸ்டாய்னிஸ் தன்னை மீண்டும் 'ஆல்ரவுண்டர்' என்பதை நிரூபித்துவிட்டார். பேட்டிங்கில் 39 ரன்கள், பந்துவீச்சில் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஜொலித்தார். ஒட்டுமொத்தத்தில் டெல்லி அணி எந்த ஸ்கோரையும் அடித்து அதை தக்கவைத்து போராட்டு வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துவிட்டது.
ராஜஸ்தான் சொதப்பல்
மாறாக, ராஜஸ்தான் அணிக்கு ஆர்ச்சர் தனது பந்துவீச்சால் முக்கியக விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தும் அதை அடுத்தடுத்து வந்த பந்துவீச்சாளர்கள் தக்க வைக்கவில்லை.
வெற்றிக்காக களத்தில் நின்று போராட வேண்டும், நெருக்கடியைச் சமாளித்து, அழுத்தத்தை தாங்கி களத்தில் நிற்கும் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட ராஜஸ்தான் அணியில் இல்லாதது பெரும் வேதனை.
தொடக்கத்தில் கட்டுக்கோப்பான பீல்டிங், பந்துவீச்சால் டெல்லி அணிக்கு நெருக்கடி அளித்த ராஜஸ்தான் நடுப்பகுதியில் கோட்டைவிட்டது.
மாற்றம் தேவை
ஸ்மித் அடித்து ஆடுவதை தவிர்த்துவிட்டு, விக்கெட்டை தக்கவைக்க முயல வேண்டும். முடிந்தால் அடுத்தடுத்த போட்டிகளில் நடுப்பகுதியில் களமிறங்கி பேட்டிங் வரிசையை வலிமைப்படுத்தலாம். தொடக்கத்திலேயே ஸ்மித் ஆட்டமிழக்கும்போது பின்வரிசையில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு பெரும் சரிவுக்கு இட்டுச் செல்கிறது.
ராஜஸ்தான் அணியில் திவேஷியா, ஆர்ச்சர் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் சொதப்பினர். வருன் ஆரோன், ஆன்ட்ரூ டை, ஸ்ரேயாஸ் கோபால், நேற்று ரன்களை வாரி வழங்கியது ராஜஸ்தானுக்கு ஏற்பட் பின்னடைவு.
ஒரு கட்டத்தில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளுக்கு 79 ரன்கள் சேர்த்து திணறிக்கொண்டிருந்தது. அதைப் பயன்படுத்தி நெருக்கடி அளித்து சுருட்டியிருக்கலாம் ஆனால், ஸ்டாய்னிஷ், ஹெட்மயரை நிலைக்கவைத்து ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் தவறு செய்துவிட்டனர்.
பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்
185 ரன்கள் ஷார்ஜாவில் அடித்துவிடக்கூடிய ஸ்கோர்தான். இதை ஷார்ஜாவில் 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி தோற்றுவிடுமா என்று ரசிகர்கள் எண்ணியதற்கு மாறாகத்தான் நடந்தது. வழக்கமான ஷார்ஜா ஆடுகளமாக இருந்தால் நிச்சயம் சிக்ஸர்கள், பவுண்டரிகளாக பறந்திருக்கும். ஆனால், பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் சற்று ஒத்துழைத்ததால், பேட்ஸ்மேன்களால் விக்கெட்டை தக்கவைக்க முடியாமல் இழந்தனர்.
குறிப்பாக முக்கிய பேட்ஸ்மேன்கள் பட்லர், ஸ்மித், சாம்ஸன் ஆகியோர் அடித்து ஆட வேண்டும் என்று எண்ணாமல் வி்க்கெட்டை நிலைக்க வைத்து பின்னர் அதிரடியை வெளிப்படுத்தி இருக்கவேண்டும். களத்தில் நின்றுவிட்டாலே எதிரணிக்கு அழுத்தம் அதிகரிக்கும். அதை செய்யத் தவறி விட்டனர். ஒட்டுமொத்தத்தில் பந்துவீச்சு, பேட்டிங்கிலும் சொதப்பிவிட்டது ராஜஸ்தான் அணி.
பட்லரை வெளியேற்றிய அஸ்வின்
185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ஜெய்ஸ்வால், பட்லர் ஜோடி நிலைக்கவில்லை. அஸ்வின் வீசிய 3-வது ஓவரில் 'ஸ்குயர் லெக்கில்' தவணிடம் கேட்ச் கொடுத்து பட்லர் 13 ரன்னில் வெளியேறினார்.
அடுத்துவந்த ஸ்மித் அதிரடியாக ஷாட்களை ஆடி விரைவாக ரன்களைச் சேர்த்தார். நார்ஜேயின் 9-வது ஓவரில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் 24 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு வந்த சாம்ஸன் இந்த முறையும் சொதப்பி 5 ரன்னிஸ் ஸ்டாய்னிஷிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். லாம்ரார் ஒரு ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
விக்கெட் வீழ்ச்சி
இளம் வீரர் ஜெய்ஸ்வால் 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டாய்னிஷ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விகெட்டுகளை இழந்தது.
கடைசி 56 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி இழந்தது.
ராகுல் திவேஷியா இறுதிவரை போராடி 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். திவேஷியா சேர்த்த ஸ்கோர்தான் அணியில் அதிகபட்சம். கடைசிநிலை பேட்ஸ்மேன்கள் 5 பேரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி வெற்றியை டெல்லியிடம் தாரை வார்த்தார்கள்.
19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளையும் , அஸ்வின், ஸ்டாய்னிஷ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆர்ச்சர் அசத்தல்
முன்னதாக டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி சேஸிங் செய்ய விரும்பியதால், டெல்லி அணிமுதலில் பேட்டிங் செய்தது. பிரித்வி ஷா, தவண் கூட்டணி ஆட்டத்தைத் தொடங்கினர். அதிவேகமான ஆர்ச்சர் பந்துவீச்சை ஆட முடியாமல் திணறிய இருவரும் ஆர்ச்சரிடமே விக்கெட்டுகளை இழந்தனர். தவண் (5), பிரித்வி ஷா(19) ரன்னில் வெளியேறினர்.
நல்ல ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர்(22), ரிஷப்பந்த்(5) இருவரும் ராஜஸ்தான் அணியின் அருமையான பீல்டிங்கால் ரன் அவுட் செய்யப்பட்டனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக வீழ்ந்து 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறியது.
காப்பாற்றிய கூட்டணி
ஸ்டாய்னிஷ், ஹெட்மயர் கூட்டணி ஓரளவுக்கு விக்கெட்டை நிலைப்படுத்தி ரன்களைச் சேர்த்தனர். ஸ்டாய்னிஷ் 39 ரன்னிலும், ஹெட்மயர் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர் ஆட்டமிழந்தபோதுகூட டெல்லி அணி 6 விக்கெட்டுகளுக்கு 149 ரன்கள் சேர்த்திருந்தது.
ஆனால், ராஜஸ்தான் அணியின் மோசமான பந்துவீச்சை பயன்படுத்திய டெல்லியின் டெய்லண்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர். ஹர்ஸ் படேல்(16), அக்சர் படேல்(17) ரன்கள் சேர்க்க ஸ்கோர் ஓரளவுக்கு உயர்ந்தது. ரபாடா(2), அஸ்வின் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணித் தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT