Published : 15 May 2014 02:56 PM
Last Updated : 15 May 2014 02:56 PM

கிரிக்கெட் சூதாட்டம்: நியூசிலாந்து முன்னாள் வீரர் லூ வின்செண்ட் அதிரடி தகவல்கள்

பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங், வீரர்கள் ஈடுபட்ட சூதாட்ட விவகாரம் பற்றிய புதிய அதிரடித் தகவல்களை நியூசிலாந்தின் முன்னாள் வீரர் லூ வின்சென்ட் ஐசிசி. கிரிக்கெட் சூதாட்ட ஊழல் ஒழிப்புக் கமிட்டியிடம் அளித்துள்ளார்.

எந்தெந்த போட்டிகளில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர், எந்தெந்த போட்டிகள் பிக்சிங்கிற்காக குறிவைக்கப்பட்டன. தற்போதைய சர்வதேச கேப்டன் ஒருவரை சூதாட்ட ஊழலில் மூழ்கிய மற்றொரு வீரர் அணுகியது உட்பட பல அதிரடிச் சூதாட்ட தகவல்களை லூ வின்சென்ட் ஐசிசி ஊழல் ஒழிப்புக் கமிட்டியிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தத் தகவல்களை பல்வேறு கிரிக்கெட் வாரியங்கள் நியமித்த புலன் விசாரணை அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஐசிசி விசாரித்து வருகிறது. இதன் முடிவுகள் வெளிவரும் போது 14 ஆண்டுகளுக்கு முன்பாக சூதாட்டப்புகாரில் சிக்கி சின்னபின்னமான மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஹேன்சி குரோனியே விவகாரத்தை விட பெரிதான பூதம் ஒன்று கிளம்ப வாய்பிருப்பதாகவே லண்டன் டெலிகிராப் பத்திரிக்கை கூறியுள்ளது.

லூ வின்செண்ட் கொடுத்த தகவல்களின் பேரில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் மீது ஐசிசி பெரும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த விசாரணை முழுமையடைய 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இருபது ஓவர் உள்நாட்டு கிரிக்கெட், உட்பட 4 நாடுகளில் நடத்தப்படும் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்களில் வீரர்களை ஈடுபடுத்தும் சூதாட்ட விவகாரங்கள் இன்னும் தொடர்ந்து வருவதாகவே வின்சென்ட் கூறியிருப்பதாக டெலிகிராப் செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) பற்றியே பெரும்பாலான தகவல்கள் ஐசிசியிடம் வின்சென்ட் கூறியிருப்பதாக தெரிகிறது. நிழலுலக ஆசாமிகள் ஐசிஎல். கிரிக்கெட்டில் ஆடிய வீரர்களுக்கு பணம் மற்றும் அழகிகளையும் சப்ளை செய்த விவகாரமும் இதில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகளிலும் வீரர்களை ஈடுபடுத்தும் சூதாட்டம் நடைபெற்றுள்ளது என்கிறார் லூ வின்செண்ட்.

இங்கிலாந்தில் தான் விளையாடியபோது லங்காஷயர், சசெக்ஸ் அணிகளிலும் சூதாட்டம் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x